தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று (பிப்ரவரி 13) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திருச்சி வந்து தொகுதி பங்கீட்டு விவகாரத்தை இறுதி செய்ய உள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா, புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. வழக்கம்போல் அதிமுக அதிக தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதற்கு அடுத்தபடியாக பாஜகவுக்கு தான் அதிக சீட்கள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக 30 தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று இரவு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடையும் அமித் ஷா, நட்சத்திர விடுதியில் தங்குகிறார். நாளை காலை ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் சென்று பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். மாலையில் திருச்சி திரும்பி, தமிழக பாஜக மையக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இதையும் படிங்க: 2 நாள் பயணம்!! இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா!! திருச்சி பாஜகவினர் உற்சாகம்!!

தமிழக பாஜக தலைவர்கள், அதிமுகவிடம் கேட்க வேண்டிய 30 தொகுதிகளின் பட்டியலை அமித் ஷாவிடம் சமர்ப்பிக்க உள்ளனர். மத்திய உளவுத்துறை சர்வே அடிப்படையில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலும் ஏற்கனவே அமித் ஷாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இரு பட்டியல்களையும் ஒப்பிட்டு, இறுதி 30 தொகுதிகளை அமித் ஷா இன்றே தீர்மானிக்கிறார்.
இந்த பட்டியலை வைத்து தான் தமிழக பாஜக, அதிமுகவுடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி ஒதுக்கீட்டை இறுதி செய்ய உள்ளது. பாஜக தமிழகத்தில் தனது செல்வாக்கை விரிவாக்க விரும்புவதால், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை மட்டும் கோரி வருகிறது. அதிமுகவும் கூட்டணியை வலுப்படுத்த விரும்பினாலும், அதிக தொகுதிகளை விட்டுக்கொடுக்க தயங்குகிறது.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் திருச்சியில் முகாமிட்டு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். அமித் ஷாவின் இந்த சுற்றுப்பயணம், என்டிஏ கூட்டணியின் தேர்தல் வியூகத்தை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவுக்கு எதிரான வலுவான அணியை உருவாக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. தொகுதி பங்கீடு இறுதியானால், தமிழக தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும்.
இதையும் படிங்க: முழுமையாகாத கூட்டணி?! தொகுதி பங்கீடு இழுபறி!? தலையை பிய்த்துக் கொள்ளும் திமுக - அதிமுக - தவெக!!