இந்திய ரயில்வே வரலாற்றில் மாபெரும் சுற்றுச்சூழல் மைல்கல்லாக, திரவ இயற்கை எரிவாயுவான எல்.என்.ஜி. (LNG) மற்றும் டீசல் என இரண்டு வகை எரிபொருட்களிலும் இயங்கக்கூடிய நாட்டின் முதல் இரட்டை எரிபொருள் (Dual-Fuel) ரயில் சேவையைக் குஜராத் மாநிலம் சபர்மதி ரயில் நிலையத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்திய ரயில்வேயைப் பசுமை ஆற்றல் வழித்தடத்திற்கு மாற்றுவதற்கும், பாரம்பரிய டீசல் எரிபொருள் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைப்பதற்கும் மத்திய அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளின் உச்சக்கட்டமாக இந்த முன்னோடித் திட்டம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் மூத்த ரயில்வே அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், சுமார் ₹1,542 கோடி மதிப்பிலான பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் ரயில்வே பாதுகாப்புத் திட்டங்களுடன் சேர்த்து, இந்தியாவின் இந்த முதல் எல்.என்.ஜி. ரயிலையும் அமைச்சர் அமித் ஷா முறைப்படி மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இதையும் படிங்க: போதைப்பொருள் இல்லா இந்தியா: 2029-ஐ இலக்காக நிர்ணயித்த மத்திய அரசு - அமித்ஷா!!

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ரயிலின் தொழில்நுட்ப வடிவமைப்பு குறித்து அகமதாபாத் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ள தகவலின்படி, சபர்மதி ஒருங்கிணைந்த ரயில் பெட்டிப் பணிமனையில் தலா 1,400 குதிரைத்திறன் கொண்ட இரண்டு ஓட்டுநர் ஆற்றல் பெட்டிகள் அதிநவீன முறையில் எல்.என்.ஜி. மற்றும் டீசல் இரட்டை எரிபொருள் அமைப்பாக வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இந்த என்ஜின்கள் சுமார் 2,000 கிலோமீட்டருக்கும் அதிகமான களப் பரிசோதனைகளை எவ்வித தடையுமின்றி வெற்றிகரமாக நிறைவு செய்து தனது முழுமையான இயக்கத் திறனை நிலைநாட்டியுள்ளன.
இந்த இரட்டை எரிபொருள் அமைப்பின் மூலம், வழக்கமான டீசல் பயன்பாட்டில் சுமார் 40 சதவீதம் வரை எல்.என்.ஜி. எரிவாயுவைக் கொண்டு மாற்றி இயக்க முடியும் என்பதுடன், எரிபொருள் தேவைக்கு ஏற்ப என்ஜின் தானாகவே டீசலில் இருந்து எல்.என்.ஜி.க்கும், எல்.என்.ஜி.யில் இருந்து டீசலுக்கும் மாறிக் கொள்ளும் கூடுதல் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளது.
இதன் மூலம் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்களின் உமிழ்வு பெருமளவு குறைக்கப்பட்டு காற்று மாசுபாடு கட்டுப்படுத்தப்படும். மேலும், ஒரு ரயிலுக்கு ஆண்டுதோறும் சுமார் ₹23.9 லட்சம் வரை எரிபொருள் செலவு மிச்சமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு என்ஜின் பெட்டியிலும் பொருத்தப்பட்டுள்ள 2,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட எல்.என்.ஜி. எரிபொருள் தொட்டி மூலம் ஒரே நிரப்பலில் சுமார் 444 கிலோமீட்டர் தூரம் வரை ரயிலைத் தடங்கலின்றி இயக்க முடியும் என்பது இதன் தனித்துவ சிறப்பம்சமாகும்.
இதையும் படிங்க: இந்தியாவை விளையாட்டு துறையின் உலக மையமாக மாற்றுவோம்! அகமதாபாத் விழாவில் அமித் ஷா உறுதி!