பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5 ஆம் சென்னையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அரசியல் வட்டாரத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலைக்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆருத்ரா கோல்ட் மோசடி விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதாகவும், இதனால் ரவுடி ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சென்னையின் நிழல் உலகத்தில் மூன்று குழுக்களுக்கு இடையேயான ஆதிக்கப் போட்டியும் ஒரு காரணமாக இருக்கலாம் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் ஜூலை 14 அன்று போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ரவுடி நாகேந்திரனும் உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரரான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணனை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரியும் கூறினார்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு.. சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு!
தொடர்ந்து,ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ க்கு மாற்றக்கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு தடை இல்லை என்று தெரிவித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐக்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்ய கூறியதை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவில் என்ன தவறு உள்ளது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், குற்றப்பத்திரிகை ரத்துக்கும் இடைக்கால தடை விதித்துள்ளது.
இதையும் படிங்க: ஷாக்...! தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை ரத்து... சிறுமி கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு!