இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி, 2026-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் ஒரு பகுதியாக இன்று புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு காலை 7:00 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6:00 மணி வரை மக்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
பாரம்பரியம் மாறா தேர்தல் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 30 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 10.14 லட்சம் வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற உள்ளனர். இதற்காக 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 117 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ராஜ் பவன் தொகுதியில் உள்ள ஒரு சிறப்பு வாக்குச்சாவடியில், வாக்காளர்களைக் கவரும் வகையில் பழங்காலப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2.71 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 30,471 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. மொத்தம் 883 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாலக்காடு தொகுதியின் சித்தூர் பகுதியில் அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். முதல்முறையாக வாக்களிக்க வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு 'அல்வா' வழங்கித் தேர்தல் ஆணையம் வரவேற்பு அளித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதையும் படிங்க: கேரளா, அசாம், புதுச்சேரியில் இன்று சட்டசபை தேர்தல்! காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு!
அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 2.50 கோடி வாக்காளர்களில், சரிபாதியாக 1.25 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 31,490 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 722 வேட்பாளர்களின் தலைவிதியை மக்கள் தீர்மானிக்க உள்ளனர். அசாமில் பதற்றமான தொகுதிகளாகக் கண்டறியப்பட்ட இடங்களில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கத் துணை ராணுவப்படை பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளது.
இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை, இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை! கேரள தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!