அயோத்தி ராமர் கோயிலைத் தொடர்ந்து, பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை கையாடல் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கோயில் நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
பத்ரிநாத் கோயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, காணிக்கை தொடர்பாக சந்தேகத்திற்கிடமான நிகழ்வுகள் பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, டேராடூனைச் சேர்ந்த பைரவ சேனா அமைப்பு இந்த விவகாரம் குறித்து புகார் அளித்தது. சமூக வலைதளங்களிலும் இந்த குற்றச்சாட்டு பரவலாக பேசப்பட்டதைத் தொடர்ந்து, பத்ரிநாத்–கேதார்நாத் கோயில் நிர்வாகக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த புகாரை முழுமையாக விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையுடன் தொடர்புடைய மிக முக்கியமான விவகாரமாக இதை கருதுவதாகவும், விசாரணைக் குழுவின் அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், முறைகேடு உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜூலை - செப்.-ல் 'எல் நினோ' தாக்கம் உச்சம் தொடுமா..?? உலக வானிலை அமைப்பு வார்னிங்..!!
இதற்கு முன்பு அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் நன்கொடைகள் கையாடல் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மதுரா கிருஷ்ணர் ஆலயத்திலும் நிதி முறைகேடு நடந்ததாக அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த விவகாரத்தில், மதுரா ஆலயத்தின் மடாதிபதி தினேஷ் பலாகிரி மகாராஜ் மீது இந்து அமைப்பு ஒன்று முறைகேடு புகார் அளித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்தடுத்து முக்கிய கோயில்களில் காணிக்கை மற்றும் நிதி முறைகேடு குறித்த புகார்கள் எழுந்துள்ள நிலையில், அவை தொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: தவெகவில் இணைந்ததற்கு இதுதான் காரணம்..!! வைகைச்செல்வன் பரபரப்பு பேட்டி..!!