சமீபகாலமாக மக்களிடையே ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகிறது. ஓடும் ரயிலில் தொங்கிய படி வீடியோ எடுப்பது, ஆக்ரோஷமான அலைகளுக்கு நடுவே நின்று வீடியோ எடுப்பது, மலை உச்சி, பள்ளத்தாக்கு, பாலத்தின் விளிம்பு என ஆபத்தான பகுதிகளில் நின்று ரீல்ஸ் செய்யும் போக்கு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு ஏற்படுவதோடு, பொது இடங்களில் இதுபோல் ரீல்ஸ் எடுப்பவர்களால் உடன் இருக்கும் மக்களும் தொந்தரவிற்கு ஆளாகின்றனர்.
மக்களிடையே தீயாய் பரவி வரும் இந்த ரீல்ஸ் மோகம் தற்போது கோயில்களையும் விட்டு வைக்கவில்லை. புனிதமான கோயில் வளாகத்திற்குள்ளேயே செல்போனை வைத்து குத்து பாடல்களுக்கும், ஆபாச பாடல்களுக்கும் ரீல்ஸ் எடுக்கும் போக்கு அதிகரித்துள்ளது. தற்போது திருப்பதியில் இதுபோல் ரீல்ஸ் வீடியோக்கள் எடுக்கப்படுவது அதிகரித்ததையடுத்து தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருமலை மலை மீது அமைந்துள்ள இந்த புனித தலமான திருப்பதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகிறார்கள். ஆனாலும், சிலர் கோவிலின் ஆன்மிக புனிதத்தையும், பக்தர்களின் உணர்வுகளையும் கருதாமல் பொழுதுபோக்குக்காக வீடியோக்கள் எடுத்து வருகின்றனர். இந்த வீடியோக்கள், சமூக வலைதளங்களில் “ரீல்ஸ்” என்ற வடிவில் பரவி வருகின்றன. இது கோவிலின் மரியாதையை கேள்விக்குறியாக்கியுள்ளது என்று தேவஸ்தானம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: டென்னிஸ் வீராங்கனையின் உயிரை பறித்த ரீல்ஸ் மோகம்.. தந்தை செய்த கொடூர செயல்..!
இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வகை வீடியோக்கள் பக்தர்களிடையே ஆட்சேபனைக்குரிய மனப்பாங்குகளை உருவாக்குவதோடு, கோவிலின் பாரம்பரிய்ம் மற்றும் புனிதத்தையும் கெடுக்கும் அபாயமும் உள்ளது. இதனை தடுக்கும் நோக்கில், கோவில் வளாகத்தில் வீடியோ எடுப்பதை முற்றிலும் தடைசெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறி வீடியோ எடுப்பவர்கள் மீது போலீசாரும் கோவில் நிர்வாகத்தினரும் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பர் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கோவிலின் புனிதத்தையும், ஆன்மிக சூழலையும் காக்க அனைத்து பக்தர்களும் ஒத்துழைக்க வேண்டுமெனவும், ஆன்மிகத்தை மதித்து நடக்க வேண்டும் என்பதையும் தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பட்டப்பகலில் அட்டூழியம் ... இளைஞர் ஓட, ஓட வெட்டிக் கொலை ... நடந்தது என்ன?