நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தன்று, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவுடன் கேக் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 62 லட்சத்து 46 ஆயிரத்து 412 கேக் துண்டுகளைக் கொள்முதல் செய்யத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளது. பிரிட்டானியா, ட்ரீம் பேக், எலைட் நேச்சுரல், ஐடிசி ஆகிய நிறுவனங்களிடம் இருந்து கேக் கொள்முதல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு கேக் துண்டும் அதிகபட்சம் 45 கிராம் எடை கொண்டதாகவும், தனித்தனி உறைகளில் அடைக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு ஒரே வகையான கேக் வழங்காமல், மிக்ஸ்டு ஃப்ரூட் அல்லது டூட்டி ஃப்ரூட்டி, கிளாசிக் வெண்ணிலா, ரிச் சாக்லேட், பட்டர் அல்லது மில்க் ஸ்பாஞ்ச் என நான்கு வகையான சுவைகளில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கேக்குகள் மென்மையாகவும் தரமானதாகவும் இருக்க வேண்டும் என்பதுடன், பூஞ்சை, துர்நாற்றம் மற்றும் தடை செய்யப்பட்ட நிறமூட்டிகள் இருக்கக் கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் தினத்திற்கு இதுவரை சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டு வந்த நிலையில், தவெக ஆட்சியில் முதல் முறையாக கேக் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே நவம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ள குழந்தைகள் தின கொண்டாட்டத்தில் முதலமைச்சர் விஜய் நேரில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING ரூ.7.54 கோடிக்கு கேக் கொள்முதல்... பள்ளி மாணவர்களுக்கு சி.எம். விஜயின் ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள அரசு பள்ளியில் நடைபெறும் குழந்தைகள் தின கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ள முதலமைச்சர் விஜய், குழந்தைகளுக்கு கேக் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நவம்பர் 14ம் தேதி முதலமைச்சர் விஜய் அம்பாசமுத்திரம் செல்ல உள்ளார்.
இதுகுறித்த முழுமையான பயணத்திட்டம் மற்றும் நிகழ்ச்சி நிரல் அரசு தரப்பில் இருந்து வெளியாகவில்லை. இருப்பினும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக, முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் முக்கியத் தலைவர்களின் பிறந்தநாள் போன்ற சிறப்பு நிகழ்வுகளின்போது பள்ளிகளில் சத்துணவுடன் சர்க்கரைப் பொங்கல் உள்ளிட்ட இனிப்புகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், குழந்தைகள் தினத்தன்று மாணவர்களுக்குப் பொட்டலமிடப்பட்ட கேக் வழங்கும் திட்டம் புதிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தவெகவில் வெடிக்கிறதா அதிருப்திப் புயல்? கூண்டோடு வெளியேற ரெடியாகும் முக்கிய நிர்வாகிகள்? விஜய்க்கு புதிய சவால்!