நெல் கொள்முதல் மற்றும் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை வழங்குவதில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சகத்தால் அனுப்பப்பட்ட கடிதத்தைக் குறிப்பிட்டு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நியாயமான விலையைத் தராமல் வஞ்சிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர்: மத்திய அரசுதான் நெல்லுக்கு உரிய விலையைத் தரவில்லை. ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் ஊக்கத்தொகை வழங்க விரும்பும் மாநில அரசுகளைத் தடுப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். கொடுக்கிற மகராசன்களை (மாநில அரசுகளை) தடுக்காமலாவது இருக்கலாம் அல்லவா? என அவர் சாடியுள்ளார்.

மத்திய நிதி அமைச்சகத்தின் விளக்கங்களைக் கடுமையாகச் சாடிய சண்முகம் பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது' என்ற தமிழ்ப் பழமொழியைத் தங்களுக்கு (நிர்மலா சீதாராமன்) நினைவூட்டுகிறேன். உண்மைகளை மறைத்துவிட்டு, முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டால், நீங்கள் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுத்தான் போவீர்கள்" என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM) தொகுதி பங்கீடு நிறைவு! 5 இடங்களில் போட்டி!
மத்திய அரசு அண்மையில் மாநில அரசுகளுக்கு அனுப்பிய கடிதத்தில், நெல்லுக்கு மாநில அரசுகள் கூடுதல் போனஸ் வழங்குவது சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டதாகத் தெரிகிறது. இதனைச் சுட்டிக்காட்டிய சண்முகம், விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட அதிகம் போய்விடக் கூடாது என்பதில் மத்திய அரசு குறியாக உள்ளது எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்தச் சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்தத் தாக்குதல் மத்திய அரசுக்குத் தேர்தல் களத்தில் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கத் திராவிடக் கட்சிகளும், இடதுசாரி கட்சிகளும் இணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் மத்திய அரசு! திருநங்கை மசோதாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு!