மத்திய மேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த முரசு புயல், கடற்கரையை முழுமையாகக் கடந்துவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை 3.30 மணிக்கும் 5.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் ஒங்கோல் அருகே, நெல்லூர் மற்றும் நரசாபூர் இடையே புயல் கரையைக் கடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது இந்தக் கடுமையான புயல் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடலோரப் பகுதியில், ஒங்கோலுக்கு வடகிழக்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: தரையைத் தொட்டது கண் பகுதி... ஆந்திராவில் சம்பவத்தை ஆரம்பித்த ‘முரசு’ புயல்...120 கி.மீ வேகத்தில் ருத்ரதாண்டவம்...!
புயல் தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று நண்பகலுக்குள் படிப்படியாக வலுவிழந்து புயலாகவும், இன்று இரவுக்குள் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடந்தபோது, ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒங்கோல் பகுதியில் மிகக் கனமழை பெய்தது. இதன் காரணமாகப் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன. புயலின் தொடர்ச்சியான தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, ஆந்திரப் பிரதேசத்திற்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடந்த பின்னரும் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரகாசம், பாபட்லா, கிருஷ்ணா உள்ளிட்ட தெற்கு கடலோர மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடந்த பிறகு அதன் தாக்கம் படிப்படியாகக் குறைந்தாலும், மழை தொடர வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, ஆந்திரப் பிரதேசத்தில் புயல் பாதிப்புகளை மதிப்பிடும் பணிகள் தொடங்கியுள்ளன. மின்சாரக் கட்டமைப்புகள், சாலைகள், வீடுகள் மற்றும் விவசாயப் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடலோரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாகச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக சுமார் 31,000 மின்கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக ஆந்திரப் பிரதேசத்தின் தெற்கு கடலோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்து வருகிறது. தெலங்கானா, தெற்கு ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களிலும் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களிலும் மழை தொடரக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: ஆத்தாடி இம்புட்டு ஸ்பீடா...!! - சென்னைக்கு மிக அருகே நெருங்கும் ஆபத்து... கோர முகத்தைக் காட்ட ஆரம்பித்த ‘முரசு’...!