திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) பக்தர்களை மோசடியிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேவஸ்தானத்தின் பெயர், சின்னம், லோகோ அல்லது சமூக வலைதளக் கணக்குகளை போலியாகப் பயன்படுத்தி இயங்கும் நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 259 போலி இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ரவி விடுத்த அறிக்கையில், “திருப்பதி ஏழுமலையான் தரிசனம், ஆர்ஜித சேவைகள், தங்கும் விடுதி முன்பதிவு ஆகியவற்றிற்காக பலர் போலி இணையதளங்களை உருவாக்கி பக்தர்களை ஏமாற்றி வருகின்றனர். இணையதளங்கள் மட்டுமல்லாமல், வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் தேவஸ்தானம் பெயரில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு மோசடிகள் நடைபெறுகின்றன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போலி தளங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போலவே வடிவமைக்கப்பட்டு, கூகுள் தேடலில் முன்னிலையில் தோன்றுகின்றன. தரிசன டிக்கெட்டுகள், விடுதி முன்பதிவு, விஐபி தரிசனம் அல்லது உடனடி சேவைகள் எனக் கூறி ஆன்லைனில் பணம் வசூலிக்கின்றன. ஆனால் பக்தர்கள் திருமலைக்குச் சென்றதும் எந்த முன்பதிவும் இல்லாததைக் கண்டு ஏமாற்றமடைகின்றனர். இதனால் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுவது அடிக்கடி நிகழ்கிறது.
இதையும் படிங்க: அடடே.. இந்த Dress code-அ நோட் பண்ணீங்களா..!! கவனம் ஈர்க்கும் திரிஷா, எஸ்ஏசி, ஷோபா வீடியோ!!

பக்தர்கள் தரிசனம், ஆர்ஜித சேவை, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து முன்பதிவுகளையும் https://ttdevasthanams.ap.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ‘TTDevasthanams’ என்ற அதிகாரப்பூர்வ மொபைல் செயலி மூலமே செய்ய வேண்டும் என தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளது. வாட்ஸ்அப் அல்லது பிற சமூக ஊடகங்களில் வரும் லிங்குகள், முன்பதிவு சலுகைகள் அல்லது “உடனடி டிக்கெட் வாங்கித் தருகிறோம்” என்ற கூற்றுகளை நம்பி பணம் அனுப்பக் கூடாது. தேவஸ்தானம் ஒருபோதும் அத்தகைய லிங்குகளை அனுப்புவதில்லை.
மேலும், முன்பின் தெரியாத நபர்கள் அல்லது இடைத்தரகர்கள் மூலம் விஐபி தரிசனம் அல்லது சிறப்பு சேவைகள் பெற முயற்சிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகமான தளங்கள் அல்லது செய்திகள் கண்டால் உடனடியாக தேவஸ்தான விழிப்புணர்வு பிரிவிடம் தெரிவிக்கலாம். பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருந்து, அதிகாரப்பூர்வ வழிகளை மட்டும் பயன்படுத்தி பாதுகாப்பாக திருமலை தரிசனம் பெற வேண்டும் என்பதே தேவஸ்தானத்தின் வேண்டுகோள்.
இதையும் படிங்க: விஜயை சீண்டிய நயினார்..! அம்மா விவகாரத்தில் அமைச்சர் அருண் ராஜ் கொடுத்த பதிலடி!!