மத்திய அரசு, பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு (E20) திட்டத்தை 2025-26 ஆண்டிற்குள் முழுமையாக அமல்படுத்துவதற்கு முனைப்பு காட்டி வருகிறது. இந்தத் திட்டம், சுற்றுச்சூழல் மாசு குறைப்பு, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்தல் மற்றும் விவசாயிகளின் வருவாயை உயர்த்துதல் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2030-ஐ இலக்காகக் கொண்டிருந்த இத்திட்டம், பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பின்படி, 2025-ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2014-ல் 1.5% எத்தனால் கலப்புடன் தொடங்கிய இத்திட்டம், 2022-ல் 10% கலப்பு இலக்கை அடைந்தது. தற்போது, E20 எரிபொருள் திட்டம் மூலம் ஒரு லிட்டர் எரிபொருளில் 800 மி.லி. பெட்ரோலும், 200 மி.லி. எத்தனாலும் கலக்கப்படுகிறது. இதனால், ஆண்டுக்கு 54,894 கோடி ரூபாய் சேமிப்பு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 10% குறைப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜெட் ஸ்பீடில் ஏறப்போகும் கச்சா எண்ணெய் விலை!! தாறுமாறாக உயரப்போகும் விலைவாசி!!
இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வு நாடாக இருப்பதால், இத்திட்டம் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதோடு, கரியமில வாயு வெளியேற்றத்தையும் குறைக்கிறது. கரும்பு மற்றும் தாவர வித்துக்களில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படுவதால், கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. இதன்மூலம், இந்தியா மரபு சாரா எரிசக்தி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.
எனினும், 2023-க்கு முந்தைய வாகனங்களில் E20 எரிபொருள் பயன்பாடு மைலேஜ் குறைவு மற்றும் துருப்பிடிக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சமாளிக்க, வாகன உற்பத்தியாளர்களை E20-க்கு ஏற்றவாறு இன்ஜின்களை மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே இத்திட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன, மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில், இத்திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் E20 பெட்ரோல் காரணமாக வாகன எஞ்சின் பாதிப்பதாகவும், எத்தனால் கலப்பு இல்லாத பெட்ரோலும் வாகன ஓட்டிகளுக்கு விற்கப்படவேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் பெட்ரோல் உடன் 20% எத்தனால் கலப்பு திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தத் திட்டம், பசுமை எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியாக மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும், இத்திட்டத்திற்கு எதிராக சுற்றுச்சூழல், வாகன செயல்திறன் மற்றும் எரிபொருள் தரம் தொடர்பான கவலைகளை முன்வைத்து பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனுதாரர்கள், 20% எத்தனால் கலப்பு வாகனங்களின் இயந்திர செயல்திறனை பாதிக்கலாம், எரிபொருள் திறனை குறைக்கலாம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என வாதிட்டனர். மேலும், எத்தனால் உற்பத்திக்கு அதிகளவு நீர் மற்றும் விவசாய நிலங்கள் தேவைப்படுவதால், இது உணவு பாதுகாப்பு மற்றும் நீர் வளங்களை பாதிக்கும் எனவும் குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்த மத்திய அரசு, இந்தத் திட்டம் பசுமை பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, பெட்ரோல் இறக்குமதியை குறைத்து, உள்நாட்டு எத்தனால் உற்பத்தியை ஊக்குவிக்கும் என்று தெரிவித்தது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மனுவை விசாரித்து, இத்திட்டம் பொது நலனுக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளதாக கருதி, மனுவை தள்ளுபடி செய்தது. மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடுவதற்கு போதுமான காரணங்கள் இல்லை எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. இந்தத் தீர்ப்பு, மத்திய அரசின் பசுமை எரிசக்தி முயற்சிகளுக்கு முக்கிய ஆதரவாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: தெருநாய்களை அப்புறப்படுத்தும் விவகாரம்; இடைக்கால தடை இல்லை; சுப்ரீம் கோர்ட் காட்டம்!