மாகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் சாலையில் இருந்த பள்ளங்களைத் தவிர்ப்பதற்காகத் திடீரெனத் திரும்பிய கார் ஒன்று மாநிலப் போக்குவரத்துக் பேருந்து மீது மோதியதில், 11 வயது சிறுவன் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
பீட் மாவட்டத்திலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஜல்காவ் தாலுகாவில், காம்காவ்-பண்டர்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஷிண்டேவாடி கிராஸ் ரோட்டில், அக்டோபர் 18ம் தேதி காலை சுமார் 11 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் மஜல்காவ்னைச் சேர்ந்தவர்கள் என்றும், அண்டை மாவட்டமான தாராசிவ்வில் உள்ள துளஜாபூரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்திசையில் வந்த மகாராஷ்டிர மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (MSRTC) பேருந்து மீது அவர்களது கார் மோதியதில் விபத்து ஏற்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
கார் அதிவேகமாக பேருந்து மீது மோதியதில் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் உள்ளே இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் ஓம்கார் மகாதேவ் கிரி (24), கஜனன் மகாதேவ் நம்தாஸ் (38), அவரது மகன் சமர்த் (11), சோம்நாத் படே (23), மற்றும் அனில் ஆச்சார்யா (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்... பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த ஆம்னி பேருந்து... 40க்கும் மேற்பட்ட பயணிகளின் நிலை என்ன?
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில், பாலத்தில் இருந்த பள்ளங்களைத் தவிர்க்க முயன்றபோது அதிவேக கார் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது தெரியவந்தது என அதிகாரி தெரிவித்தார்.
மஜல்கான்-டெல்கான் வழித்தடத்தில் மோசமடைந்து வரும் சாலைகளின் நிலை குறித்து, அந்தப் பயங்கர விபத்து பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. தரமற்ற கட்டுமானம் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக, நெடுஞ்சாலை முழுவதும் பிளவுகளும் சமமற்ற பரப்புகளும் ஏற்பட்டு, அந்த முக்கியச் சாலையை ஒரு விபத்து மண்டலமாக மாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டி, உள்ளூர்வாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டம் காரணமாக நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பின்னர், மூத்த காவல்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டக்காரர்களை அமைதிப்படுத்தி, போக்குவரத்தை மீண்டும் சீரமைத்தனர்.
இதையும் படிங்க: பட்டாசு ஆலை வெடி விபத்து..! தரைமட்டமான கட்டடம்... இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!