கோவா தலைநகர் பனாஜியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள (Shirgaon) ஷிர்கவுன் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ லைராய் தேவி கோயில் உள்ளது. பார்வதி தேவியின் அவதாரமாக லைராய் தேவியை பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்த கோயிலில் ஜாத்ரா (jatra) திருவிழா நேற்று துவங்கியது. கோவா மட்டுமின்றி, மகாராஷ்ட்ரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் விழாவுக்கு வந்திருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி திருவிழாவுக்காக கோயில் முன் பெரிய அளவில் தீயை மூட்டி, பலவிதமான சம்பிரதாயங்கள் செய்யப்பட்டன.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பார்வதி தேவியை வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாக இன்று அதிகாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மூட்டப்பட்ட இடத்தைச் சுற்றி குவிந்திருந்தனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்த நிலையில், திடீரென நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதையும் படிங்க: பாஜகவின் அடக்குமுறைக்கு அடிப்பணிந்தார் எடப்பாடியார்! சரமாரியாக விளாசிய முதலமைச்சர்...

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மாபுசாவில் உள்ள வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவபர்களை அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும், காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார்.

பக்தர்கள் கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகரித்து விட்டது. ஆனால் போதுமான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை. நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்ததால் அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் பக்தர்கள் திடீரென வெளியேற முயன்றனர். அதனால் நெரிசல் ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால், நெரிசலுக்கான காரணத்தை முதலமைச்சர் பிரமோத் சாவந்த் விளக்கினார்.

கோயில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வயர்களில் ஏற்பட்ட மின்கசிவால் ஓரிரு பக்தர்களை மின்சாரம் தாக்கியது. அதனால் மற்ற பக்தர்கள் பயந்து போய் ஓட முயன்றனர். அதைத் தொடர்ந்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கூறினார். ஆனாலும், தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக, பிரதமர் மோடி தன்னிடம் பேசியதாகவும், தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று கூறியதாகவும் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து எஸ்.பி மற்றும் கலெக்டர் விசாரித்து வருவதாகவும், அடுத்த 3 நாட்களுக்கு மாநிலத்தில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்வதாகவும் முதல்வர் பிரமோத் சாவந்த் கூறினார். இதனிடையே, ஷிர்காவ் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் இறந்தது கவலை அளிப்பதாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறி உள்ளார். ஜனாதிபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கலில், கோவாவின் ஷிர்காவ் நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். கோவா கோயில் விழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியான சம்பவம் பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: மீண்டும், மீண்டுமா... என்டே இல்லாமல் நீளும் இருட்டுக்கடை பஞ்சாயத்து- வெளியானது பகீர் விளக்கம்