ஐரோப்பிய நாடுகளுக்கான முக்கிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து தலைநகர் தி ஹேக்கை சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெற்ற இடங்கள் வரை இந்திய மற்றும் டச்சு கொடிகள் அலைபாய, உற்சாகக் குரல்கள் எதிரொலித்தன. நெதர்லாந்தின் இளம் இந்திய கலைஞர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு கலாசார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
பாரம்பரிய இந்திய நடனங்கள், மயிலாட்டம், பரதநாட்டியம், கர்நாடக இசை மற்றும் பக்தி பாடல்கள் உள்ளிட்டவை அரங்கேற்றப்பட்டன. இந்திய கலாசாரத்தின் செழுமையை பிரதிபலிக்கும் இந்த நிகழ்ச்சியை கண்டு பிரதமர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து, தி ஹேக்கில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்ட பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

“நான் நெதர்லாந்தில் இருக்கிறேன் என்பதையே மறந்துவிட்டேன். இந்தியாவில் கொண்டாடப்படும் திருவிழா ஒன்றில் பங்கேற்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது” என்று உணர்ச்சிபூர்வமாகக் கூறினார். தி ஹேக் இந்திய-நெதர்லாந்து நட்புறவின் உயிரோட்டமான அடையாளமாக மாறியிருப்பதாக பிரதமர் விவரித்தார். “நெதர்லாந்து தலைவர்களுடன் பேசும்போதெல்லாம், இங்குள்ள இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பை அவர்கள் பெருமையுடன் பாராட்டுகின்றனர்.
இதையும் படிங்க: கான்வாய் வாகனங்கள் பாதியாக குறைப்பு..!! பிரதமர் மோடியின் எரிபொருள் சிக்கன நடவடிக்கை..!!
இந்த நாட்டின் சமூக வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தில் நீங்கள் ஆற்றும் பங்கு மகத்தானது. இதனால் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுகிறோம்” என்றார். இந்தியா தற்போது பெரும் கனவுகளுடன் முன்னேறி வருவதாகவும், இளைஞர்களின் திறமையே அதற்கு அடித்தளம் என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அரைக்கடத்தி தொழில்நுட்பத் துறைகளில் இந்திய இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழலை இந்தியா கொண்டுள்ளது. மேலும், உலகின் மிகப் பெரிய அரசு நிதியிலான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்திய வம்சாவளியினரின் கடின உழைப்பும் திறமையும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதாக பிரதமரின் உரை அமைந்தது.
நெதர்லாந்தில் வாழும் இந்தியர்கள் தங்கள் தாய்நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவாக இருப்பதுடன், தங்களின் இருப்பிட நாட்டின் முன்னேற்றத்துக்கும் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இந்த சுற்றுப்பயணம் இந்தியா-ஐரோப்பா இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தங்கம் வாங்காதீங்க.. பிரதமர் மோடியின் மக்கள் தியாக வேண்டுகோள்..!! ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு..!!