காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் பிரச்சினை. இதை இரு நாடுகளும் பேசித்தீர்த்துக்கொள்ளும், இந்த நிலைப்பாட்டில் இருந்து இந்தியா மாறாது என அதிபர் ட்ரம்ப் கருத்துக்கு இந்தியா சார்பில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா –பாகிஸ்தான் இடையே போர் பதற்றமான சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலையிட்டு மத்தியஸ்தம் செய்ததால்தான் போர் சூழல் மாறி, இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடித்தனர் என்று அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார். அது மட்டுமல்லாமல் இந்தியாவும், பாகிஸ்தானும் விரும்பினால் நீண்டகாலமாக இரு நாடுகளுக்கும் இடையே நிலுவையில் இருக்கும் காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுநடத்தி முடித்துவைப்பேன் என்று அதிபர் ட்ரம்ப் பேசியிருந்தார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு அடுத்த அடி.. மருந்து வர்த்தகம் குளோஸ்.. ஏற்றுமதியை நிறுத்தியது தமிழகம்..!
அதுமட்டுமல்லாமல் “இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் போரை நிறுத்த வேண்டும். நீங்கள் போரை நிறுத்தினால் உங்களுடன் வர்த்தகத்தை அமெரிக்கா தொடரும், போரைத் தொடர்ந்தால் எந்தவிதமான வர்த்தகத்திலும் ஈடுபடமுடியாது. இரு நாடுகளுக்கு இடையே போர் தீவிரமாகியிருந்தால் அது அணு ஆயுதப் போராக மாறியிருக்கும், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்திருப்பார்கள். என்னுடைய செயலால் போர் நிறுத்தப்பட்டது பெருமையாக இருக்கிறது” என்று அதிபர் ட்ரம்ப் பேசியிருந்தார்.

இதற்கு மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் நேற்று ஊடகங்களிடம் அதிபர் ட்ரம்ப் பேச்சுக்கு பதில் அளித்தார். அவர் பேசியதாவது:
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நீண்டகாலமாகவே ஒரே நிலைப்பாட்டோடு இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினை. இதில் 3 வது நாடு தலையீடு இல்லை என்பது எங்கள் நிலைப்பாடு. இந்தியாவின் பகுதியை சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளதுதான் பிரச்சினை.
இந்தியா, அமெரிக்கா அதிகாரிகள் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம் தொடர்பாக எந்த விவகாரமும் பேசப்படவில்லை. ஆப்ரேஷன் சிந்தூர் 7ம் தேதி நடந்தது, ஆனால், வர்த்தகம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே பேசப்படவில்லை.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் முழுக்க வழக்கமான ஆயுதங்களைக் கொண்டு எடுத்த நடவடிக்கை, இதில் அதிபர் ட்ரம்ப் சொல்வதுபோல் அணு ஆயுதத்துக்கு வேலையில்லை. இந்தியா அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியவோ அல்லது எல்லை தாண்டிய தீவிரவாதத்தையோ அனுமதிக்கமாட்டோம் என்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது உங்களுக்குத் தெரியும். பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் நடந்த சந்திப்பில், இதுபோன்ற சூழல்களுக்கு அடிபணிவது அவர்களின் சொந்த மண்ணிலேயே அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் நாங்கள் எச்சரித்தோம்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்பது முற்றிலும் தீவிரவாதிகளின் புகலிடங்களை, வாழிடங்களை, கட்டமைப்பை அழிக்கும் நடவடிக்கை. இதை உலகத் தலைவர்களுக்கும் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் ராணுவம் ஒதுங்கி இருந்தால் பிரச்சினையே இருந்திருக்காது. இதை நாங்கள் பல நாடுகளின் தலைவர்களிடம் தெரிவித்தபோது, அந்த வெளிநாட்டுத் தலைவர்கள் இதைத்தான் தங்கள் பாகிஸ்தான் தரப்பிலும் பகிர்ந்து கொண்டோம்”.
இவ்வாறு ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாரத் மாதா கி ஜே! இந்தியாவுக்கு நாங்க இருக்கோம்! நாட்டுக்காக உயிரையே கொடுப்போம்! பஞ்சாபில் திரண்ட இளைஞர்கள்..!