24-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் (XXIV Commonwealth Games) 2030-ம் ஆண்டு நடைபெற உள்ளன. இது காமன்வெல்த் விளையாட்டுகளின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் முக்கிய நிகழ்வாகும். இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு இந்தியா, கனடா, நைஜீரியா உள்ளிட்ட ஏழு நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளன. மேலும் 2036-ல் நடைபெற ஒலிம்பிக் தொடரை நடத்தும் வாய்ப்பை பெற இந்தியா முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் 2030 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான உரிமை கோரலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கான விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்க விளையாட்டு துறை அமைச்சகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த முக்கிய முடிவு, உலகளாவிய விளையாட்டு அரங்கில் இந்தியாவின் மதிப்பை மேலும் உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!
இப்போட்டிகளை அகமதாபாத் நகரில் நடத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது, இதில் நரேந்திர மோடி மைதானம் மையப்படுத்தப்பட்ட இடமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானம் 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப்போட்டியை வெற்றிகரமாக நடத்திய அனுபவத்தைக் கொண்டுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 72 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை ஒன்றிணைக்கும் மாபெரும் நிகழ்வாகும், இது உலக அளவில் இந்தியாவின் விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத் திறனை வெளிப்படுத்துவதற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பாக அமையும். இந்தியா ஏற்கனவே 2010-ல் தில்லியில் காமன்வெல்த் போட்டிகளை நடத்திய அனுபவம் கொண்டிருப்பதால், இம்முறை மேலும் சிறப்பாக இந்நிகழ்வை நடத்துவதற்கு தயாராக உள்ளது.
மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. இந்தப் போட்டிகள் இந்தியாவின் பொருளாதாரம், சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பெரும் தூண்டுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்திய விளையாட்டு வீரர்களுக்கு சொந்த மண்ணில் பங்கேற்கும் வாய்ப்பு, அவர்களின் செயல்திறனை உயர்த்துவதற்கு உதவும். இந்த முன்மொழிவு காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும், மேலும் இந்தியா இந்த உரிமையைப் பெறுவதற்கு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிகழ்வு இந்தியாவின் உலகளாவிய நற்பெயரை மேம்படுத்துவதோடு, விளையாட்டு கலாச்சாரத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தி.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!