கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா பரஸ்பர வரி (reciprocal tariff) விதித்தது. இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் கூடுதல்வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் கூறினார். பின்னர் இந்த உத்தரவை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அந்த கெடு வரும் ஜூலை 9-ல் முடிகிறது.
இதற்கிடையில், இந்தியா– அமெரிக்கா இடையே பரஸ்பர வரி தொடர்பாக பேச்சு நடந்து வருகிறது. இச்சூழலில், எந்த காலக்கெடுவை நோக்கியும் நாங்கள் செயல்படவில்லை. தேச நலனை நோக்கியே செயல்படுகிறோம் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், நாட்டின் நலனே முக்கியம்; காலக்கெடு அல்ல என தெரிவித்திருந்தார். மேலும் அவர், “இரு தரப்பினருக்கும் பயன் அளிக்கக்கூடியதாக, இரு தரப்பினருக்கும் வெற்றியை அளிக்கக்கூடியதாக ஒப்பந்தம் இருந்தால் மட்டுமே அது சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தமாகவும், ஏற்றுக்கொள்ளத்தக்க ஒப்பந்தமாகவும் இருக்கும்.
இதையும் படிங்க: வெளியுறவுத்துறை அமைச்சருக்கே ஆப்பா? கட்சி தாவும் சசிதரூர்? புகைச்சலில் பாஜ- காங்கிரஸ்..!
எங்களின் தேசிய நலன்தான் எங்களுக்கு மிகவும் முக்கியம். அதை மனதில் கொண்டே எங்கள் முடிவு இருக்கும். வளர்ந்த நாடுகளுடன் அத்தகைய ஒப்பந்தங்களை மேற்கொள்ள இந்தியா எப்போதும் தயாராக உள்ளது.” என்று கூறி இருந்தார்.

பியூஷ் கோயலின் இந்த கருத்தை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பியூஷ் கோயல் எப்படி வேண்டுமானாலும் மார் தட்டிக் கொள்ளட்டும். நான் சொல்வதை குறித்துவைத்துக் கொள்ளுங்கள். ட்ரம்பின் வரி காலக்கெடுவுக்கு மோடி பணிவுடன் தலைவணங்குவார்.” என்று கூறினர்.
ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்தார். எந்த காலக்கெடுவுக்கு பயந்தும் இந்தியா செயல்படாது. நாட்டு நலனை மனதில் வைத்தே அமெரிக்காவுடன் பேச்சு நடத்துகிறோம்.

மோடி அரசு வந்த பிறகு மொரிஷியஸ், ஒன்றுபட்ட அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளுடன் சுதந்திரமான முறையில் வர்த்தக ஒப்பந்தகள் செய்திருக்கிறோம். இன்று இந்தியா வலிமையான நிலையில் இருந்து பேச்சு நடத்துகிறது. நாங்கள் தன்னம்பிக்கை கொண்டவர்கள். எங்களால் உலகில் உள்ள எவருடனும் போட்டி போட முடியும்.
இது ஒன்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கீழ் இருந்த இந்தியா இல்லை. அதுதான் தேச நலனை பார்க்காமல் பேச்சுவார்த்தைக்கு கெஞ்சும். ராகுல் காந்தி, அவருடைய கட்சி மற்றும் சகாக்கள் எதிர்மறை விஷயங்களையே பரப்புகின்றனர். இதனால் ராகுல் காந்தியை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
இதையும் படிங்க: அவ்ளோ அசிங்கமா பேசிட்டு ஓட்டுக்காக மட்டும் ஓடி வருவீங்களா? ராகுல்காந்திக்கு மீண்டும் சிக்கல்.. பிரசாந்த் கிஷோர் ஆவேசம்..