ஆபாச படங்கள் பார்ப்பதற்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 'ஒரு தடையால் நேபாளத்தில் என்ன நிகழ்ந்தது என்பது தெரியும் அல்லவா' என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. எனினும், நான்கு வாரங்களுக்குப் பின் மனு விசாரிக்கப்படும் என உத்தரவிட்டது.
இணையத்தில் ஆபாசப் படங்களை வயது வந்தோருக்கு மட்டும் அனுமதிக்கும் கொள்கை வகுக்க வேண்டும் என வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை (PIL) தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு நேற்று (நவம்பர் 3) விசாரித்தது. 
"ஒரு தடையால் நேபாளத்தில் என்ன நிகழ்ந்தது என்பதை உலகமே பார்த்தது" என்று கடுமையாக எச்சரித்த அமர்வு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தது. கவாய் நவம்பர் 23 அன்று ஓய்வு பெறவுள்ளதால், இது அவரது காலத்தில் முடிவுக்கு வராது என தெரிகிறது. இந்த வழக்கு, இணைய சுதந்திரம், இளைஞர்கள் பாதுகாப்பு, அரசியல் அடக்குமுறை போன்ற விவாதங்களைத் தூண்டியுள்ளது.
இதையும் படிங்க: தொடர் நிலநடுக்கத்தால் சிக்கித்தவிக்கும் ஆப்கானிஸ்தான்..!! உதவிக்கரம் நீட்டும் இந்தியா..!!
மனுதாரர் சமூக ஆர்வலர் பி.எல். ஜெயின் தாக்கல் செய்த இந்த வழக்கில், இந்தியாவில் "பில்லியன்" எண்ணிக்கையிலான ஆபாச இணையதளங்கள் திறந்ததாகவும், அவை வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் எளிதாகக் கிடைப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. 
"ஆண்டுதோறும் 20 கோடிக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், குழந்தை பாலியல் தொடர்பான உள்ளடக்கங்கள் உள்ளிட்டவை பரவுகின்றன" என்று அரசின் சொந்த அறிக்கைகளை மேற்கோள் காட்டி வாதிடப்பட்டது. குறிப்பாக, 13 முதல் 18 வயதினரின் மனதில் இவை தீமையான எண்ணங்களை விதைத்து, தனிநபர் வாழ்க்கையையும் சமூகத்தையும் சீர்குலைக்கின்றன என்று வலியுறுத்தப்பட்டது. கோவிட் காலத்தில் குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களை அதிகம் பயன்படுத்தியதால், இந்தப் பிரச்சினை மோசமடைந்ததாகவும் கூறப்பட்டது.
மனுவில், மத்திய அரசு தேசிய அளவிலான செயல் திட்டம் வகுக்க வேண்டும் என கோரப்பட்டது. வயது வந்தோருக்கு மட்டும் அனுமதி அளிக்கும் வகையில், IT சட்டம் பிரிவு 69A-ன் கீழ் ஆபாசத் தளங்களைத் தடை செய்ய வேண்டும். பொது இடங்களில் ஆபாசப் படங்கள் பார்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும். 
பல நாடுகளில் (அமெரிக்கா, ஆஸ்திரேலியா) இதுபோன்ற கட்டுப்பாடுகள் உள்ளதாகவும், இந்தியாவில் 5,000 ஆபாசத் தளங்கள் ஒவ்வொரு வினாடிக்கும் அணுகப்படுவதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டப்பட்டன. இது இளைஞர்களிடையே பாலியல் குற்றங்கள், மனநலப் பிரச்சினைகளை அதிகரிப்பதாக வாதிடப்பட்டது. மேலும், OTT தளங்கள், சமூக ஊடகங்களில் (இன்ஸ்டாகிராம், யூடியூப்) பரவும் ஆபாச உள்ளடக்கங்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டது.

இதற்கு தலைமை நீதிபதி கவாய் குறுக்கிட்டு, "நீங்கள் சமூக ஊடகங்களுக்கு தடை விதித்தால் என்ன ஆகும் என்பதை நேபாளத்தில் நடந்ததைப் பார்த்தீர்கள் தானே?" என்று கேள்வி எழுப்பினார். இது அரசின் கொள்கைப் பிரச்சினை என்றும், திடீர் தடைகள் அபாயகரமானவை என்றும் சுட்டிக்காட்டினார். 
இந்த மனு நான்கு வாரங்களுக்குப் பின் விசாரிக்கப்படும் என உத்தரவிட்ட அமர்வு, மத்திய அரசுக்கு பதில் அளிக்கும்படி அறிவுறுத்தியது. இந்த ஒத்திவைப்பு, கவாயின் ஓய்வுக்கு முன் விசாரணை முடிவுக்கு கொண்டு வராததால், புதிய தலைமை நீதிபதியிடம் இது மாற்றப்படலாம் என தெரிகிறது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்து, அண்டை நாடு நேபாளத்தில் செப்டம்பர் 2025-இல் நடந்த "ஜென் Z போராட்டங்கள்"ஐ (Gen Z Protests) நினைவூட்டுகிறது. அங்கு அரசு 26 சமூக ஊடகத் தளங்களை (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், வாட்ஸ்அப், X, ரெடிட் உள்ளிட்டவை) தடை செய்தது. இது இளைஞர்களின் ஆத்திரத்தைத் தூண்டியது. ஊழல், வேலைவாய்ப்பின்மை, அரசியல் குடும்பங்களின் சொகுசு வாழ்க்கை (நெபோ கிட்ஸ்) ஆகியவை சமூக ஊடகங்களில் வைரலானது போராட்டத்தின் உண்மையான தூண்டுதலாக அமைந்தது.
செப்டம்பர் 8 மற்றும் 9 அன்று காத்மாண்டுவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் (பெரும்பாலும் ஜென் Z) அரசுக்கு எதிராக போராடினர். பாராளுமன்றத்தை முற்றிய போது, போலீஸ் கண்ணீர்க்காற்று, ரப்பர் புல்லெட்கள், நீர்க்குழாய்கள், நேரடி துப்பாக்கிச் சூடு ஆகியவற்றால் தாக்கியது. 
இதில் 19 முதல் 76 பேர் வரை கொல்லப்பட்டனர் (அம்னெஸ்டி இன்டர்நேஷனல், ஐ.நா. அறிக்கைகள்). பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியின் வீடு, அமைச்சர்கள் வீடுகள், பாராளுமன்றம், உச்ச நீதிமன்றம் சூறையாடப்பட்டன. சிங்கா துர்பார் அரசு அலுவலகம் தீக்கு எரிந்தது. போராட்டக்காரர்கள் VPN, டிஸ்கார்ட் போன்றவற்றைப் பயன்படுத்தி தடையை மீறி ஒருங்கிணைத்தனர்.
இதன் விளைவாக பிரதமர் ஒலி ராஜினாமா செய்தார். அரசு சமூக ஊடகத் தடையை திரும்பப் பெற்றது. இராணுவம் காத்மாண்டுவில் கர்ஃபியூ அமல்படுத்தியது. போராட்டம் ஊழல், பொருளாதார நெருக்கடி (நேபாளத்தில் இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடு செல்லும் சூழல்) ஆகியவற்றை எதிர்த்தது. ஐ.நா. "போலீஸ் அதிகப் பட்சமான வன்முறை பயன்படுத்தியது" என்று கண்டித்தது. இந்த போராட்டம், சமூக ஊடகத் தடைகள் சுதந்திரத்தை அழிக்கும் என்ற உலகளாவிய எச்சரிக்கையாக மாறியது.
இதையும் படிங்க: Kalmaegi புயல்!! 100 கி.மீ வேகத்தில் நெருங்கும் அரக்கன்!! இன்றே கரையை தொடும் அபாயம்!