கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணையைத் தொடங்கினர். காலை 11:45 மணிக்குத் தொடங்கிய இந்த விசாரணை, மாலை 6:00 மணி வரை நீடித்தது. இந்த விசாரணையின் முடிவில், நாளை (ஜனவரி 13) மீண்டும் நேரில் ஆஜராகுமாறு விஜய்க்குச் சிபிஐ அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் விஜய் இன்று இரவு டெல்லியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருப்பார் எனத் தெரிகிறது.

டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் இன்று விஜய் ஆஜரானார். சிபிஐ அதிகாரி சுனில் குமார் தலைமையிலான குழுவினர், விஜயிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். குறிப்பாக, "10,000 பேருக்கு மட்டுமே அனுமதி பெறப்பட்ட இடத்தில், 25,000-க்கும் அதிகமானோர் கூட எப்படி அனுமதித்தீர்கள்? திட்டமிட்ட நேரத்தை விட சுமார் 7 மணி நேரம் தாமதமாக ஏன் வந்தீர்கள்? உங்கள் தாமதமே கூட்ட நெரிசலுக்கு முக்கியக் காரணமா?" என அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். மேலும், "போலீசார் எச்சரித்தும் கூட்டத்திற்குச் சென்றது ஏன்? உங்கள் கண்முன்னே தொண்டர்கள் மயங்கி விழுந்தபோது ஒரு தலைவராக நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன?" எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: "அரசியல் ஆதாயம் தேடாதீங்க!" நேரத்தை வீணடிக்க விரும்பல! பாஜக தலைவரின் புகாருக்கு செந்தில் பாலாஜி பதிலடி!
இன்றைய விசாரணையில் விஜயுடன் முன்னாள் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் ஐ.ஜி நிர்மல் குமார் ஜோஷி ஆகியோரும் ஆஜராகினர்; அவர்களிடம் சில மணி நேரங்கள் மட்டும் விசாரணை நடத்திவிட்டு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். ஆனால், விஜயிடம் மட்டும் இடைவிடாமல் விசாரணை தொடர்ந்தது. இன்று சுமார் 6.30 மணி நேரம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்த நிலையில், சிபிஐ அதிகாரிகள் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, நாளை இரண்டாம் நாள் விசாரணை நடைபெறவுள்ளதால், டெல்லி சிபிஐ அலுவலகத்தைச் சுற்றிக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாளை டெல்லி செல்கிறார் விஜய்.. பாதுகாப்பு தாங்க..!! டெல்லி காவல்துறைக்கு பறந்த கடிதம்..!!