மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள் , மின்சாரத் திருத்தச் சட்டம் மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றைக் கண்டித்துத் தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. கேரளாவில் இடதுசாரி முன்னணியின் (LDF) ஆதரவுடன் இந்தப் போராட்டம் நடைபெறுவதால், இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்து மற்றும் வர்த்தகச் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட உள்ளன.

போக்குவரத்து முடக்கம்: கேரள அரசுப் போக்குவரத்துக் கழக (KSRTC) பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் நாளை ஓடாது. ஆட்டோ, டாக்ஸி மற்றும் லாரி தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால், சாலைப் போக்குவரத்து முற்றிலும் முடங்கும். மாநிலம் முழுவதும் உள்ள சிறு கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் (Malls) வரை அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: கேரளாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி நீதிபதி..!! யார் இந்த தன்யா நாதன்..??
பொதுத்துறை வங்கி ஊழியர்கள் (AIBEA, BEFI) இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதால், வங்கிச் சேவைகள் பாதிக்கப்படலாம். இருப்பினும் ஏடிஎம் மற்றும் ஆன்லைன் சேவைகள் செயல்படும். போக்குவரத்துப் பாதிப்பு மற்றும் மாணவர் அமைப்புகளின் ஆதரவு காரணமாக பெரும்பாலானப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டு மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள், பால் விநியோகம் மற்றும் பத்திரிகைச் சேவைகளுக்கு இந்தப் போராட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வாகனங்கள் தடையின்றிச் செல்ல அனுமதிக்கப்படும் என்று போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கேரள எல்லைப் பகுதிகளான கன்னியாகுமரி, தென்காசி, தேனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இருந்து கேரளா செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் இன்று நள்ளிரவு முதல் எல்லையிலேயே நிறுத்தப்படும். இதனால் இரு மாநிலங்களுக்கு இடையிலானப் பயணிகள் போக்குவரத்துப் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.
இதையும் படிங்க: கேரளா வீடியோ விவகாரம்.. இளம்பெண் ஷிம்ஜிதா சிறையில் அடைப்பு!