தென்னிந்தியத் திரை உலகின் முன்னணிப் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு, ஒட்டுமொத்தத் திரை உலகினரும் அரசியல் தலைவர்களும் அதிர்ச்சியும் ஆழமான துயரமும் அடைந்துள்ளனர். அவரது மறைவிற்குத் திரை பிரபலங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது உருக்கமான இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பாடகி ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
பாடகி எஸ்.ஜானகி அவர்களின் மறைவு குறித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று இரங்கல் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள உலகநாயகன் கமல்ஹாசன், பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும், அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா, இறக்கி வைக்கமுடியாத சோகம் பலர்க்கும் இருக்கும், அவர்க்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள் எனத் தனது துயரத்தைப் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: தலைமுறைகள் கடந்த காந்தக் குரல் ஓய்ந்தது.. தென்னிந்தியாவின் இசையரசி பாடகி எஸ்.ஜானகி காலமானார்!
இசைக்குயில் ஜானகி அவர்களின் மறைவு தமிழக மக்களுக்கும், இந்திய திரைத்துறைக்கும் பேரிழப்பு. காலத்தால் அழியாத பாடல்களை பாடிய அவர், என்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டே இருப்பார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல தலைமுறைகளின் இதயங்களை தனது இனிமையான குரலால் வருடிய ஜானகி அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவர் பாடிய கீதங்கள் மக்கள் மனதில் என்றும் நீங்காத இடத்தை பெற்றுள்ளன என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தெலுங்குத் திரை உலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி விடுத்துள்ள இரங்கலில், ஜானகி அம்மா அவர்களின் மறைவுச் செய்தி என் இதயத்தைப் பிழிந்துவிட்டது என்றும், தனது ஒட்டுமொத்தச் சினிமா பயணத்தில், திரையில் தாங்கள் வெளிப்படுத்திய எண்ணற்ற உணர்வுகளுக்குத் தனது இணையற்ற குரலால் உயிர் கொடுத்தவர் அவர்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். இசை உலகின் மாபெரும் சிகரத்தை நாம் இன்று இழந்துவிட்டோம், உங்களது குரல் என்றும் அழியாது என அவர் உருகியுள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து எக்ஸ் தளத்தில் கவிதை வடிவில் வெளியிட்ட இரங்கலில், சிங்கார வேலனே தேவா பாடலில் நாதஸ்வரத்தையே வென்று காட்டிய கீதவாணி நீ, நாதம் என் ஜீவனே என்றாயே, இன்று உன் நாதம் இருக்கிறது, ஜீவன் இல்லையே எனத் தனது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அரசியல் களத்திலும் ஜானகி அம்மாவின் மறைவிற்குப் பெரும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில், 17-க்கும் மேற்பட்ட மொழிகளில் 48,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி மாபெரும் சாதனை படைத்தவர் ஜானகி அம்மாள் என்றும், கோடிக்கணக்கான தமிழர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்ட அவரது நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது இரங்கலில், தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அன்போடு அழைக்கப்படும் எஸ்.ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது என்றும், பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி இசை உலகில் அழியாத தடம் பதித்த அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!