மகாராஷ்டிராவின் மாலேகான் நகரில் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி அன்று நடந்த குண்டுவெடிப்பு வழக்கில், 17 ஆண்டுகளுக்குப் பின் மும்பை சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் முன்னாள் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் உட்பட ஏழு குற்றவாளிகளும் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டனர். நீதிபதி ஏ.கே.லஹோதி, வழக்கறிஞர்கள் குண்டு வெடிப்பை நிரூபித்தாலும், மோட்டார் சைக்கிளில் குண்டு வைக்கப்பட்டதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறினார்.

இந்தக் குண்டுவெடிப்பு, ரம்ஜான் மாதத்தில் மசூதி அருகே நடந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) தொடக்கத்தில் இஸ்லாமிய அமைப்புகளை சந்தேகித்தாலும், பின்னர் இந்து தீவிரவாத குழுவான அபினவ் பாரத் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர்ல என்னதான் நடந்துச்சு!! காங்கிரஸ் - பாஜக காரசார விவாதம்..!
2011-ல் வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. விசாரணையில், பிரக்யா தாகூரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளில் குண்டு வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது, ஆனால் இதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது. இத்தீர்ப்பு அரசியல் மற்றும் சமூக விவாதங்களைத் தூண்டியுள்ளது. பாஜக தலைவர்கள் இதை ‘ஹிந்து தீவிரவாதம்’ என்ற குற்றச்சாட்டுக்கு எதிரான வெற்றியாகக் கருத, எதிர்க்கட்சிகள் விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தங்கள் வாக்கு வங்கிக்காக இந்து பயங்கரவாதம் என்ற பொய்யான கருத்தை பரப்பி வந்ததாகவும், இதற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பா.ஜ.க. தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியலுக்காக "இந்து பயங்கரவாதம்" என்ற பொய்யான கதையை உருவாக்கி, மக்களை திசைதிருப்ப முயன்றதாக அவர் குற்றம்சாட்டினார். இந்த தீர்ப்பு "காங்கிரஸின் சதி" தோல்வியடைந்ததை வெளிப்படுத்துவதாகவும், "பகவா பயங்கரவாதம்" என்ற கருத்து முற்றிலும் உடைந்துவிட்டதாகவும் அவர் கூறினார்

இந்த வழக்கில் காவி பயங்கரவாதத்தின் சாத்தியத்தை நிரூபிக்க காங்கிரஸ் செய்த முயற்சி தோல்வியடைந்தது, நாட்டு மக்களிடம் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் எந்த எல்லைக்கும் செல்லும் என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், கர்னல் புரோஹித் மற்றும் பிரக்யா தாகூர் மீதான குற்றச்சாட்டுகள் அநியாயமானவை என்றும், அவர்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் கூறிய ஆவர், இருவருக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த தீர்ப்பு, காங்கிரஸின் அரசியல் உள்நோக்கத்தை அம்பலப்படுத்தியதாகவும், நீதித்துறையின் நேர்மையை உறுதிப்படுத்துவதாகவும் பாஜக கருதுவதாக பிரசாத் தெரிவித்தார். இது ஒரு "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்" என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஆபரேசன் சிந்தூர் குறித்து பார்லி.,-யில் விவாதம்! எஸ்கேப் ஆனார் சசிதரூர்.. கடுப்பில் காங்.,!