இம்பால்: மணிப்பூரின் காங்க்போக்பி மாவட்டத்தில் இரு தரப்பினருக்கு இடையே மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 2 கிராமவாசிகள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மெய்டி மற்றும் கூகி பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், பின்னர் பெரும் இனக்கலவரமாக மாறியது. இந்த வன்முறையில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்வேறு கட்டங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, மோதல் சம்பவங்கள் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தன.
இந்த நிலையில், காங்க்போக்பி மாவட்டத்தில் கூகி மக்கள் அதிகம் வசிக்கும் என்-டெய்ஹாங் கிராமத்தில் நேற்று காலை மீண்டும் வன்முறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காலை 9.30 மணியளவில் ஆயுதம் ஏந்திய இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: அருணாச்சலில் கோர வெள்ளம்! நிலச்சரிவு! ராணுவ வீரர்கள் 5 பேர் மாயம்! மீட்புப் பணி தீவிரம்!
அப்போது, தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் ஆயுதம் ஏந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கிராமத்தை சேர்ந்த லேமிதிங்தங், 35, மற்றும் நய்ச்சின் ஆகிய இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செய்லுன், 65, என்பவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

வன்முறையின்போது அப்பகுதியில் இருந்த சில வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றதால், அச்சமடைந்த கிராம மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர்.
உயிருக்கு பாதுகாப்பு தேடி ஏராளமான பொதுமக்கள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது.
தகவல் அறிந்ததும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்துக்கு பிறகு மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், காங்க்போக்பியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் படையினரும் அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: GST வரியில் மீண்டும் மாற்றமா? நிர்மலா சீதாராமன் தலைமையில் ஓராண்டுக்கு பிறகு கூடும் கவுன்சில் கூட்டம்!