சென்னை: இண்டிகோ விமான நிறுவனத்தின் தொடர் ரத்துகள், தாமதங்கள் காரணமாக இந்தியாவின் விமானப் போக்குவரத்து துறை கடந்த 6 நாட்களாக குழப்பத்தில் மூழ்கியுள்ளது. இதற்கு மத்திய அரசின் “மானோபாலி மாடல்” காரணம் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்ததற்கு, விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் கி. ராம் மோகன் நாயுடு உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார். “முழு தகவல் தெரியாமல் பேசக்கூடாது. இது அரசியல் விவகாரம் அல்ல, பொதுமக்கள் பாதிக்கப்படும் பிரச்சனை” என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 4 முதல் தொடங்கிய இந்த குழப்பம், இண்டிகோவின் புதிய ஊழியர் கடமை நேரக் கட்டுப்பாடு (FDTL) விதிகளை அமல்படுத்தியதால் ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்தாகின. சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட பெரிய விமான நிலையங்களில் பயணிகள் தவித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்தாகின. மற்ற விமான நிறுவனங்களின் கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்ததால், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால், ரிஃபண்ட் கோரி காத்திருக்கும் பயணிகள், தாமதங்களால் வேலை, சந்திப்புகளைத் தவற விட்டவர்கள் என லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அம்மாடியோவ்!! விண்ணை முட்டும் விமான கட்டணம்! 5 மடங்கு அதிகரிப்பு!! இண்டிகோ ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் சிக்கல்!
இந்த சூழலில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி எக்ஸ் (டுவிட்டர்) இல் பதிவிட்டு, “இண்டிகோ நிறுவனத்தின் தோல்விக்கு மத்திய அரசின் மானோபாலி மாடல் காரணம். விமான ரத்துகள், தாமதங்கள், உதவியின்மை – இவை சாதாரண இந்தியர்களைத் துன்புறுத்துகின்றன. இந்தியா அனைத்துத் துறைகளிலும் நியாயமான போட்டிக்கு தகுதியானது, ‘மேட்ச்-ஃபிக்ஸிங்’ மானோபாலிகளுக்கு அல்ல” என்று கடுமையாக விமர்சித்தார்.
இந்தப் பதிவு வைரலாகி, காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் “ராகுல் சரியாகக் கூறியுள்ளார். இந்தியாவில் பல துறைகளில் டூஓபாலி (இரு நிறுவனங்களின் ஆதிக்கம்) நடக்கிறது” என்று ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, செய்தியாளர்களிடம் பேசுகையில், “இது அரசியல் விவகாரம் அல்ல, பொதுமக்களைப் பாதிக்கும் பிரச்சனை. நாங்கள் ஒப்பந்த செலவுகளைக் குறைத்து, அதிக விமானங்களை அனுமதிக்கும் வகையில் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். போட்டி அதிகரிக்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறுகிறேன்.

நாட்டில் விமானப் போக்குவரத்துத் தேவை நாளுக்கு நாள் உயர்கிறது. எனவே, இத்துறையில் மக்கள் நுழைவதற்கு வாய்ப்புகள் உருவாகின்றன. அரசும் அதையே விரும்புகிறது. முழு தகவல் தெரிந்தால் மட்டும் ராகுல் பேசுவது நல்லது” என்று தெரிவித்தார்.
அமைச்சர் மேலும், இண்டிகோ நிறுவனத்தின் மூத்த மேலாளர்களுடன் நடத்திய உயர் அதிகாரிகள் கூட்டத்தில், “ரிஃபண்ட் பிரச்சனைகளை முன்னுரிமையாகக் கையாளுங்கள். டிசம்பர் 7 இரவு 8 மணிக்குள் அனைத்து ரத்து விமானங்களுக்கான ரிஃபண்ட்களையும் தீர்க்கவும்” என்று உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு, விமான கட்டணங்களை கட்டுப்படுத்தி, ₹7,500 முதல் ₹18,000 வரை (தூரத்தைப் பொறுத்து) உச்ச வரம்பு நிர்ணயித்துள்ளது. DGCA (விமானத் துறை ஒழுங்குமுறை ஆணையம்) இண்டிகோவுக்கு ‘ஷோ-காஸ்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 4 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி, பொறுப்பாளிகளுக்கு தண்டனை விதிக்கும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
காங்கிரஸ் தரப்பில், தெலங்கானா எம்பி மல்லூ ரவி அமைச்சருக்கு கடிதம் எழுதி, “இண்டிகோவின் செயல்பாட்டு சீர்குலைவு அசாதாரணமானது. பயணிகளின் உரிமைகளைப் பாதுகாக்குங்கள்” என்று கோரியுள்ளார். சிவசேனா (UBT) எம்பி பிரியங்கா சதுர்வேதி ராஜ்ய சபையில் அவசரக் கூட்டத்துக்கு அறிவிப்பு கொடுத்துள்ளார். இண்டிகோ நிறுவனம், “3 நாட்களுக்குள் சேவைகள் முழுமையாக மீட்கப்படும்” என்று உறுதியளித்துள்ளது. ஆனால், பயணிகள் இன்னும் தவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அம்மாடியோவ்!! விண்ணை முட்டும் விமான கட்டணம்! 5 மடங்கு அதிகரிப்பு!! இண்டிகோ ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் சிக்கல்!