கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் ஐ.பி.எல் 2025 வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர், 47 பேர் காயமடைந்தனர். ஆர்.சி.பி அணி முதல் முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே திரண்டனர். இந்நிகழ்ச்சியை கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கே.எஸ்.சி.ஏ) ஏற்பாடு செய்திருந்தது.

மைதானத்தின் உள்ளே 35,000 பேர் மட்டுமே அமரக்கூடிய இடவசதி இருந்தபோதிலும், 2-3 லட்சம் ரசிகர்கள் கூடியதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். ரசிகர்கள் மைதான வாயில்களை உடைத்து உள்ளே நுழைய முயன்றதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றபோதும், லேசான தடியடி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள பவுரிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ்கள் விரைவாக செல்ல முடியவில்லை.
இதையும் படிங்க: நாளை பெங்களூரு செல்கிறார் பிரதமர் மோடி.. முழுவீச்சில் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!!
இந்த சூழலில் இனிவரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு சின்னசாமி மைதானம் நகரின் மையப்பகுதியில் அகற்ற பரிசீலிக்கப்பட்டு வருவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஏற்கனவே கூறினார்.
இந்நிலையில் பெங்களூருவில், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பெங்களூருவின் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியான பொம்மசந்திராவில், சூர்யா சிட்டியில் 100 ஏக்கர் பரப்பளவில் இந்த உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வளாகம் கம்பீரமாக உருவாகவுள்ளது. இந்த மைதானத்தின் மொத்த புழக்க இருக்கை திறன் 80,000 ஆகும், மேலும் இதற்காக 1,650 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செலவு செய்யப்படவுள்ளது.
இந்த மெகா விளையாட்டு வளாகம், கிரிக்கெட் மைதானத்துடன் மற்ற விளையாட்டு வசதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். இது அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய, சர்வதேச தரத்தில் அமையவுள்ளது. இந்த மைதானம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்கு புதிய மைதானமாகவும் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பெங்களூருவில் உள்ள எம். சின்னசுவாமி மைதானம் முதன்மையான கிரிக்கெட் அரங்கமாக இருந்தாலும், இந்த புதிய மைதானம் மாநிலத்தின் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றும்.

கர்நாடக வீட்டு வசதி வாரியத்தின் (KHB) முன்மொழிவை ஏற்று, இந்த திட்டத்திற்கு முதலமைச்சர் சித்தராமையா பச்சைக்கொடி காட்டியுள்ளார். இந்த மைதானம் கட்டி முடிக்கப்பட்டால், உலகளாவிய கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு பெங்களூரு மற்றொரு முக்கிய மையமாக உருவாகும். மேலும், இது உள்ளூர் விளையாட்டு வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பெங்களூருவில் உயருகிறது ஆட்டோ கட்டணம்.. நாளை முதல் அமல்..!!