நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வரும் 131-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா (தொகுதி மறுவரையறை), தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்கும் முயற்சி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோர் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
விசிக தலைவர் திருமாவளவன் மக்களவையில் பேசுகையில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு என்ற போர்வையில், தென்மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக அரசு சதி செய்கிறது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதற்காகத் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு வெகுமதி அளிப்பதற்குப் பதிலாக, அவற்றின் அரசியல் குரலை நசுக்குவது மிகப்பெரிய வஞ்சனை எனச் சாடியுள்ளார். தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளை முடக்கும் நோக்கில் இந்தச் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
நாட்டை ஆள்வதில் தமிழகத்தின் பங்கு நீர்த்துப் போகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மக்களவையில் பேசுகையில் இந்தியாவை ஆளுவதில் தமிழ்நாட்டின் பங்கை நீர்த்துப் போகச் செய்வதற்கான திட்டமிட்டச் சதியே இந்த மசோதா. மறுவரையறை ஆணையத்தின் முடிவே இறுதியானது, அதை நீதிமன்றத்தில் எதிர்க்க முடியாது எனக் கூறுவது அப்பட்டமான ஜனநாயக விரோதம் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் பராமரிக்கப்படும் எனப் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் வாய்மொழியாகக் கூறுகின்றனர். ஆனால் மசோதாவில் இது குறித்து ஒரு வரி கூட இல்லை என அவர் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் இருமுனை போட்டிதான்! தேர்தல் களம் குறித்து திருமாவளவன் விளக்கம்!

தமிழகத்திற்கு 59 இடங்கள் கிடைக்கும் என்ற அமித்ஷாவின் விளக்கத்திற்குப் பதிலளித்த எதிர்க்கட்சியினர், தமிழகத்தின் இடங்கள் கூடினாலும், ஒட்டுமொத்த அவையில் வடமாநிலங்களின் இடங்கள் அதைவிடப் பலமடங்கு கூடும் என்பதால், தேசிய அரசியலில் தமிழகத்தின் செல்வாக்கு கணிசமாகக் குறையும் எனப் புள்ளிவிபரங்களுடன் வாதிடுகின்றனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள 'கருப்புக்கொடி' போராட்டத்திற்குத் தங்களது முழு ஆதரவையும் தெரிவித்துள்ள இவ்விரு தலைவர்களும், இது தமிழ்நாட்டின் சுயமரியாதை மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதற்கான வாழ்வாதாரப் போராட்டம் என முழங்கியுள்ளனர்.
இந்த மசோதா மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்களின் எதிர்ப்பு அனல் பறந்து வருகிறது.
இதையும் படிங்க: தருமபுரியில் பரபரப்பு! பிரேமலதா விஜயகாந்தை முற்றுகையிட்டு விசிக தொண்டர்கள் கேள்வி!