குழந்தைகளுக்கான பாக்கெட் உணவுகளில் உள்ள சர்க்கரை அளவை நுகர்வோர் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில், உணவு பாக்கெட்டின் முன்பக்கத்தில் தெளிவான ஊட்டச்சத்து குறியீட்டை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.க்கு பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
பாக்கெட் உணவுகளில் குறிப்பாக குழந்தைகள் அதிகம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர். அதிக அளவு சர்க்கரை கொண்ட உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது குழந்தைகளின் உடல் நலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
ஆனால், தற்போது கடைகளில் கிடைக்கும் பாக்கெட் உணவுகளில் எவ்வளவு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது என்பதை சாதாரண நுகர்வோர் உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் தெளிவான தகவல் முறை இல்லை. இதனை மாற்றும் வகையில் புதிய ஊட்டச்சத்து குறியீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: போலியோ சொட்டு மருந்து முகாம்! துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்! கிஃப்ட் கொடுத்து அசத்தல்!
தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையிலான நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு, இது தொடர்பான பரிந்துரைகளை எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.க்கு வழங்கியுள்ளது.

அதில், பாக்கெட் உணவுகளில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதுடன், அந்த தகவல் பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையில் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைகளின் அடிப்படையில், அனைத்து பாக்கெட் உணவுகளிலும் மொத்த சர்க்கரை மற்றும் கூடுதலாக சேர்க்கப்பட்ட சர்க்கரை அளவு தனித்தனியாக குறிப்பிடப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில், ஒரு முறை பயன்படுத்தும் அளவான 'சர்விங் சைஸ்' அடிப்படையில் எவ்வளவு கிராம் சர்க்கரை உள்ளது என்பதையும், அது குழந்தைகளின் தினசரி தேவையில் எத்தனை சதவீதம் என்பதையும் குறிப்பிட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவு பாக்கெட்டின் முன்பக்கத்தில் சிவப்பு, மஞ்சள், பச்சை நிற குறியீடுகள் அல்லது அதிக சர்க்கரை உள்ள பொருட்களுக்கு எச்சரிக்கை குறியீடு போன்ற எளிய முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் நிலைக்குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பெற்றோர்கள் குழந்தைகளுக்கான உணவுகளை தேர்வு செய்யும்போது சரியான முடிவை எடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
முன்பக்க ஊட்டச்சத்து குறியீடு தொடர்பான வரைவு விதிகள் கடந்த 2022-ம் ஆண்டு வெளியிடப்பட்டும், இதுவரை இறுதி செய்யப்படவில்லை என்றும் பார்லிமென்ட் குழு சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு இந்த விதிகளை மேலும் தாமதிக்காமல் விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளின் உணவுப் பழக்கம் மற்றும் எதிர்கால உடல்நலத்தை கருத்தில் கொண்டு பாக்கெட் உணவுகளில் சர்க்கரை அளவு குறித்த வெளிப்படைத்தன்மை தேவை என்ற விவாதம் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிங்க: மழையில் நனைந்தபடி போலீஸ் வேனை தடுத்து நிறுத்திய இளம்பெண்... வைரல் ரியாவின் முழு பின்னணி இதோ!