மத்திய கிழக்கில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வந்த அமெரிக்கா, அந்நாட்டுடன் நீண்டகாலமாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலுடன் இணைந்து பெரும் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
நேற்று முன்தினம் (பிப்ரவரி 28, 2026) தொடங்கிய இந்த திடீர் தாக்குதலில் ஏவுகணைகள், டிரோன் மற்றும் போர் விமானங்கள் மூலம் ஈரான் முழுவதும் முக்கிய இலக்குகள் குறிவைக்கப்பட்டன. தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்பட பல நகரங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தன. குறிப்பாக, டெஹ்ரானில் உள்ள ராணுவ கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றிருந்த உயர்மட்டத் தலைவர்கள் மீது நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவரும், தலைமை மதகுருவுமான அயதுல்லா அலி காமேனி (வயது 86) கொல்லப்பட்டார்.

இவருடன் ராணுவ மந்திரி அசிஸ் நாசிர்சாடே, ராணுவ தளபதி அப்துல் ரகீம் மவுசவி, புரட்சிகர காவல்படை (IRGC) தளபதி முகமது பக்பூர், ராணுவ ஆலோசகர் அலி சம்கானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் சுமார் 40-க்கும் மேற்பட்ட உயர்மட்ட அதிகாரிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க-இஸ்ரேல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஈரானை நொறுக்கும் அமெரிக்கா! உள்ளே வரும் ரஷ்யா! போரை நிறுத்துங்க!! புடின் மாஸ் எண்ட்ரி!!
இந்த சம்பவம் ஈரானை மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஈரான் அரசு 40 நாள் துக்க நாட்களை அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த தாக்குதலை "ஈரானின் அணு ஆயுதத் திறனை முற்றிலும் முடக்குவதற்கான நடவடிக்கை" என்று விளக்கியுள்ளார். மேலும் தாக்குதல்கள் தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கு பதிலடியாக, ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பழிவாங்கும் வகையில், உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இந்த நீரிணை வழியாகவே உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் வணிகம் நடைபெறுகிறது.
ஈரானின் புரட்சிகர காவல்படை கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்ததால், பல டேங்கர் கப்பல்கள் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. இதனால் சர்வதேச எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியாவுக்கு இது பெரும் சவாலாக உள்ளது. இந்தியா தனது 88 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் 60 சதவீத இயற்கை எரிவாயுவை சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து இந்த நீரிணை வழியாகவே இறக்குமதி செய்கிறது.

இருப்பினும், மத்திய அரசு அதிகாரிகள் தற்போதைக்கு பெட்ரோல், டீசல் அல்லது எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என்று உறுதியளித்துள்ளனர். இந்தியாவிடம் ஏற்கனவே 10 நாட்களுக்கான பெட்ரோல்-டீசல் இருப்பு உள்ளது. மேலும், அவசரகால சேமிப்பு இருப்பு மேலும் 5-7 நாட்களுக்கு போதுமானது.
ஹார்முஸ் நீரிணை மூடல் நீண்டகாலம் நீடிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நீடித்தால், ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தப் போர் மேலும் தீவிரமடைந்தால், உலகப் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: ஆத்திரம் அடங்காத ஈரான்..!! தொடர்ந்து கேட்கும் குண்டு சத்தம்.. ஜெருசலேம் மீதும் அட்டாக்..!!