காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அதை தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறிய நிலையில் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளை குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. விமானப்படைத்தளங்கள் உள்ளிட்டவை தாக்கி அழிக்கப்பட்டன. இதனிடையே இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், நமது வீரப் படைகள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் குறிக்கோளை வெற்றிகரமாக எட்ட நடவடிக்கை எடுத்தார்கள். இந்திய ராணுவத்திற்கும் விஞ்ஞானிகளுக்கும் சல்யூட் அடிக்கிறேன். வீரப் படைகளின் வீரத்துக்கு நான் தலை வணங்குகிறேன். அனைத்து தாய்மார்கள், சகோதரிகள், இந்த நாட்டின் மகள்களுக்கு இந்த வீரமான வெற்றியை அர்ப்பணிக்கிறேன். துளியும் கருணை இல்லாமல் சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் கொன்றனர். குடும்பத்தினர் கண்முன்னே அப்பாவி சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஹல்காம் தாக்குதல் தனிப்பட்ட முறையில் மிகுந்த மன வலியை ஏற்படுத்தியது. மே 7ஆம் தேதி காலை நமது மன உறுதியின் விளைவை உலகமே பார்த்தது. பாரதத்தின் ஏவுகணைகள் அவர்களுக்கு பதிலடி கொடுத்தன. பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் அனைத்தையும் தகர்த்தோம். யாரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.
இதையும் படிங்க: ஒரு லேயரில் தப்பித்தாலும் மற்றொன்றில் மாட்டிக்கொள்வர்... லெஃப்டினன்ட் ஜெனரல் வினோத விளக்கம்!!

அடி தாங்க முடியாமல் பாகிஸ்தானியர்கள் உலக நாடுகளிடம் கெஞ்சினர். பாகிஸ்தான் டிஜிஎம்ஓ நமது ராணுவத்தை தொடர்பு கொண்டு போர் நிறுத்த கோரிக்கை வைத்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் அடியால் தாக்குதலை நிறுத்துவதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்ட பின் நாம் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டோம். போர் நிறுத்தம் தற்காலிகமானது தான். நமது படைகள் பாகிஸ்தானை கண்காணிக்கின்றன. இனிமேல் அவர்கள் வாலாட்டினால் பதிலடி பயங்கரமாக இருக்கும். அனு ஆயுதங்களை வைத்து இந்தியாவை மிரட்ட முடியாது. புதுயுகப் போர் தந்திரங்களால் இந்தியா மிகவும் வலிமையாக உள்ளது. பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் படைகள் மரியாதை செலுத்தியதை உலகமே பார்த்தது. பயங்கரவாதிகளை ஆதரிக்கும் அரசும் எதிர்க்கும் அரசும் ஒன்றாக உறவாட முடியாது.

ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு தொடக்கம்தான். பயங்கரவாதிகளும் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்பவர்களும் ஒன்று தான். அவர்களும் பயங்கரவாதிகள் தான். இந்த பதிலடி பயங்கரவாதத்திற்கு மட்டுமல்ல பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கும் சேர்த்து தான். தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக ஓட முடியாது. அதுபோல, பயங்கரவாத நடவடிக்கைகளும் அமைதி பேச்சுவார்த்தையும் ஒருசேர நடத்த முடியாது. பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒரே நேரத்தில் செயல்பட முடியாது. பயங்கரவாதத்தை ஒழிப்பது மட்டும்தான் பாகிஸ்தான் உடன் ஒரே பேச்சு என்று மிகவும் அழுத்தமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 20% பாக். விமானப்படை தளம் காலி... தாக்குதல் பற்றி விளக்கமளித்த இந்திய விமானப்படை!!