இன்று எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்த நாள். தமிழ்நாடு முழுவதும் இந்த நாள் எப்போதும்போலவே மிகுந்த உற்சாகத்துடனும், பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது. மக்கள் திலகம் என்று அழைக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இன்றும் மக்களின் மனதில் நிலைத்திருக்கிறார் என்பதற்கு இந்த கொண்டாட்டங்களே சாட்சி.காலையில் இருந்தே சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டன.
எம்.ஜி.ஆர். என்றாலே ஏழை எளிய மக்களின் நலனுக்காக வாழ்ந்தவர், அவர்களுக்கு உணவு, கல்வி, வேலைவாய்ப்பு என்று பல திட்டங்களை அறிமுகப்படுத்தியவர் என்ற நினைவு எல்லோருக்கும் முதலில் வருகிறது. இலங்கையின் நாவலப்பிட்டியில் 1917-ஆம் ஆண்டு இன்றைய தினம்தான் பிறந்தார் எம்.ஜி.ஆர். என்றாலும், தமிழக மண்ணில்தான் அவர் மக்களின் மனதில் அழியாத இடம் பிடித்தார். நடிகராகத் தொடங்கி, அரசியல்வாதியாக மாறி, முதலமைச்சராக ஆட்சி செய்து, எளிய மக்களின் கண்ணீரைத் துடைத்தவர். அவரது பிறந்த நாள் இன்று வெறும் தேதி அல்ல. அது ஒரு கொள்கையின் நினைவு நாள், மனிதநேயத்தின் கொண்டாட்ட நாள்.

இன்று தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் “மக்கள் திலகம் வாழ்க” என்ற முழக்கங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவரது புகைப்படங்கள், சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. 1987-இல் அவர் நம்மை விட்டுப் பிரிந்து 38 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இன்றும் அவரது பிறந்த நாள் ஒரு பெரிய திருவிழாவாகவே கொண்டாடப்படுவது அவரது செல்வாக்குக்கு சான்று.
இதையும் படிங்க: எங்கள் தங்கம் MGR... சதி திட்டங்களை தவிடு பொடியாக்குவோம்..! EPS சூளுரை..!
எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி எம்ஜிஆர் கனவை நினைவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது என்று புகழாரம் சூட்டினார். தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது என்று கூறியுள்ளார். சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம் எனவும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கழிவறை முதல் காவாங்கரை வரை கலைஞர் பெயர்... MGRஐ மறைக்க முயற்சிக்கும் திமுக... அதிமுக கண்டனம்...!