புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சமூக வலைதளப் பதிவைச் சுட்டிக்காட்டி, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிடம் அடிபணிந்துவிட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மீண்டும் கடும் விமர்சனம் செய்துள்ளார். கடந்த 1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போருடன் ஒப்பிட்டு, மோடியின் செயலை இந்திரா காந்தியின் தைரியத்துடன் வேறுபடுத்திக் காட்டியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "சார்... உங்களைப் பார்க்கலாமா?" என்று பிரதமர் மோடி என்னிடம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு கேட்டார். நான் "ஆம்" என்றேன். அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பாக பேசினோம்.
பிரதமர் மோடியுடன் எனக்கு நல்ல நட்புறவு உள்ளது. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதால் இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்தேன். இதனால் மோடிக்கு என்மீது மகிழ்ச்சி இல்லை. இப்போது ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை குறைத்துக்கொண்டுள்ளனர்" என்று டிரம்ப் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: பார்லி-யில் வீசப்போகும் 10 மணி நேர புயல்! ரூத்ரதாண்டவம் ஆடப்போகும் ராகுல்காந்தி! தேஜ எம்.பிக்கள் ஆலோசனை!
இதைச் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் நேற்று ஒரு பதிவை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்தபோது, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தவுடன் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.

1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரின்போது அமெரிக்கா தனது போர்க்கப்பலை அனுப்பி இந்தியாவை மிரட்டியது. ஆனால் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணியவில்லை. இதுதான் இந்திரா காந்திக்கும் பிரதமர் மோடிக்கும் உள்ள வித்தியாசம்" என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ராகுல் காந்தி தனது பதிவுடன் ஒரு பழைய வீடியோவையும் இணைத்துள்ளார். அதில் அவர் இதே விவகாரத்தைப் பற்றி பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த விமர்சனம் இந்திய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி ஏற்கெனவே பலமுறை மோடியின் வெளியுறவுக் கொள்கையை விமர்சித்து வருகிறார். இம்முறை டிரம்பின் பதிவை ஆதாரமாகக் கொண்டு விமர்சித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
டிரம்பின் பதிவு இந்தியா-ரஷ்யா உறவுகளைப் பற்றியது. உக்ரைன் போருக்குப் பிறகு இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதால் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதனால் மோடி அரசு அழுத்தத்துக்கு அடிபணிந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ராகுல் காந்தியின் இந்த விமர்சனம் இந்த விவகாரத்தை மீண்டும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.
பாஜக தரப்பில் இதற்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் இதைப் பயன்படுத்தி மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையை கேள்விக்குள்ளாக்கி வருகின்றன. 1971 போரில் இந்திரா காந்தியின் தைரியத்தை சுட்டிக்காட்டி ராகுல் கூறியுள்ளது காங்கிரஸ் ஆதரவாளர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஆடாம ஜெயிச்சோமடா!! 68 இடங்கள் கைவசம்! மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்!! பாஜக கூட்டணி அமோக வெற்றி!