டெல்லி: பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சிகள் “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR)” குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று அடம் பிடித்து வந்தன. முதல் நாள் முழுவதும் அமளி, கோஷம், சபை முடக்கம் என்று சென்ற நிலையில், நாளை (டிசம்பர் 9, செவ்வாய்) லோக்சபாவில் 10 மணி நேர சிறப்பு விவாதம் நடக்கிறது. இதை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்து பேசுகிறார். புதன்கிழமை காலை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதிலளிப்பார்.
காங்கிரஸ் தரப்பில் கே.சி. வேணுகோபால், மணீஷ் திவாரி, வர்ஷா கெய்க்வாட், முகமது ஜவைத், உஜ்வல் ராமன் சிங், இஷா கான் செளத்ரி, மல்லு ரவி, இம்ரான் மசூத், கோவல் படவி, ஜோதிமணி உள்ளிட்ட 10 எம்பிக்கள் பேசுகின்றனர்.
ராகுல் காந்தி, “மகாராஷ்டிரம், ஹரியாணா, கர்நாடகா தேர்தல்களில் நடந்ததாகக் கூறப்படும் “வாக்குத் திருட்டு”, SIR பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் பலி, போலி வாக்காளர்கள் சேர்க்கை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உஷார்!! SIR படிவத்தில் தவறான தகவல்!! பெண் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு!

கடந்த ஒரு வாரமாக எதிர்க்கட்சிகள் “SIR மூலம் பாஜக வாக்காளர்களை குறைக்கிறது” என்று குற்றம் சாட்டி அமளியில் ஈடுபட்டு வந்தன. இதனால் பல முக்கிய மசோதாக்கள் விவாதம் நடக்காமல் தள்ளிப்போனது. இப்போது விவாதம் ஒப்புக்கொள்ளப்பட்டதால், நாளை லோக்சபா அனல் பறக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எஸ்ஐஆர் (Special Intensive Revision) என்பது தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி. இதில் போலி வாக்காளர்களை நீக்குவது, புதியவர்களை சேர்ப்பது, இடம்பெயர்ந்தவர்களை கண்டறிவது போன்றவை நடக்கின்றன. ஆனால் எதிர்க்கட்சிகள் “பாஜக ஆதரவாளர்கள் மட்டும் வைக்கப்படுகிறார்கள், எதிர்க்கட்சி வாக்காளர்கள் நீக்கப்படுகிறார்கள்” என்று குற்ற்றம் சாட்டுகின்றன.
நாளை ராகுல் காந்தியின் உரைக்குப் பிறகு, பாஜக தரப்பில் கடும் பதிலடி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவாதம், 2026-27 மாநிலத் தேர்தல்களுக்கு முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: படிச்ச நமக்கே தலைசுத்துதே!! இடியாப்ப சிக்கலில் SIR!! ஏன் எதிர்க்கிறோம்? ஸ்டாலின் விளக்கம்!