புதுடெல்லி: தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR) நடவடிக்கை குறித்து இன்று லோக்சபாவில் பெரும் புயல் வீசப் போகிறது. காலை 12 மணி முதல் தொடங்கும் இந்த விவாதம் மொத்தம் 10 மணி நேரம் நீடிக்கும் என்பதால், நாடே பார்லிமெண்ட்டை நோக்கி திரும்பியிருக்கிறது.
பீஹாருக்குப் பிறகு தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தல் ஆணையம் தீவிரமாக வாக்காளர் பட்டியலை “சீர்திருத்தும்” பணியில் இறங்கியுள்ளது. இதில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாகவும், புதிதாக சேர்க்கப்படும் பெயர்கள் ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.
காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை “வாக்காளர் உரிமை பறிப்பு நடவடிக்கை” என்றும், “2024 தேர்தலுக்கு முன்னோட்டமாக பாஜகவுக்கு சாதகமாக வாக்காளர் பட்டியலை மாற்றும் சதி” என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. கடந்த டிசம்பர் 1-ம் தேதி குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முற்றுகையிட்டு வந்தன.
இதையும் படிங்க: ஊடுருவல்காரர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்! மம்தா எதிர்ப்புக்கு அமித்ஷா தரமான பதிலடி
கடந்த ஒரு வாரமாக எதிர்க்கட்சிகள் “SIR மூலம் பாஜக எதிர்கட்சியினர் வாக்காளர்களை நீக்குகிறது” என்று குற்றம் சாட்டி அமளியில் ஈடுபட்டன. இதனால் பல முக்கிய மசோதாக்கள் விவாதம் நடக்கவில்லை. அவை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டதால், சபாநாயகர் ஓம் பிர்லா அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினார். அப்போது டிசம்பர் 9-ம் தேதி எஸ்ஐஆர் குறித்து விரிவான விவாதம் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி இன்று லோக்சபாவில் பெரும் சண்டை தொடங்குகிறது.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இந்த விவாதத்தில் முன்னிலை வகித்துப் பேசுகிறார். திமுக, திரிணமூல், ஆம் ஆத்மி, இடதுசாரி உள்ளிட்ட கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் தீர்க்கமாக தேர்தல் ஆணையத்தை விளாசத் தயாராக உள்ளனர். ராகுல் காந்தி, “மகாராஷ்டிரம், ஹரியாணா, கர்நாடகா தேர்தல்களில் வாக்குத் திருட்டு நடந்தது” என்று ஆதாரங்களுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவாதத்தின் இறுதியில் நாளை (டிசம்பர் 10) மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அரசு சார்பில் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்காளர் பட்டியல் சீரமைப்பா? வாக்குரிமை பறிப்பா? என்ற கேள்வி இப்போது நாடு முழுவதும் எழுந்துள்ள நிலையில், இன்றைய 10 மணி நேர விவாதம் பார்லிமெண்ட்டின் இந்தக் குளிர்காலக் கூட்டத் தொடரின் மிக முக்கியமான நாளாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: விதியே தெரியாம விமர்சிக்கிறாரு விஜய்!! தவெக தலைவருக்கு தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பதிலடி!