இந்தியாவின் 77வது குடியரசு தின விழா இன்று டெல்லியில் கடமைப் பாதையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு விழாவின் மிக முக்கியமான அம்சமாக, இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் இந்திய ராணுவத்தின் விலங்குகள் அணிவகுப்பு முதன்முறையாக இடம்பெற்றது. இது ராணுவத்தின் ரீமவுண்ட் அண்ட் வெட்டரினரி கார்ப்ஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த அணிவகுப்பு நாட்டின் எல்லைப் பகுதிகளில், குறிப்பாக உயரமான மலைப்பிரதேசங்களில் விலங்குகள் ஆற்றும் முக்கிய பங்கை நினைவூட்டும் வகையில் அமைந்திருந்தது. இந்த சிறப்பு அணிவகுப்பில் பல்வேறு வகையான விலங்குகளும் பறவைகளும் பங்கேற்றன. இரட்டைத் திமில் கொண்ட பாக்ட்ரியன் ஒட்டகங்கள் அணிவகுத்துச் சென்றன.

இவை லடாக் மற்றும் சியாச்சின் போன்ற உயரமான, கடுமையான காலநிலை கொண்ட பகுதிகளில் போக்குவரத்து மற்றும் சுமை தூக்கும் பணிகளுக்கு பயன்படுத்தப்படுபவை. இவற்றின் உறுதியான தோற்றமும், அமைதியான நடையும் பார்வையாளர்களை கவர்ந்தது.அடுத்ததாக, லடாக்கின் ஜான்ஸ்கர் பகுதியைச் சேர்ந்த ஜான்ஸ்கர் போனிகள் நான்கு எண்ணிக்கையில் இடம்பெற்றன. மேலும், ராப்டர்கள் என்று அழைக்கப்படும் நான்கு வேட்டைப் பறவைகள் இடம்பெற்றிருந்தன. இவை உளவு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ராணுவத்தால் பயன்படுத்தப்படுபவை.
இதையும் படிங்க: அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதி ஏற்போம்..!! தவெக தலைவர் விஜய் குடியரசு தின வாழ்த்து..!!
இதில் ராணுவ நாய்களின் பங்கும் குறிப்பிடத்தக்கது. சிப்பிப்பாறை, கோம்பை, ராஜபாளையம் போன்ற தமிழ்நாட்டு இனங்களைச் சேர்ந்த நாடுகள், வழக்கமான ராணுவ சேவை நாய்கள் ஆறு என மொத்தம் பதினாறு நாய்கள் அணிவகுப்பில் பங்கேற்றன. இவை குண்டு கண்டறிதல், தேடுதல், பாதுகாப்பு போன்ற பணிகளில் சிறப்பாக செயல்படுபவை. அவை ஒழுங்குடன், ஒருங்கிணைந்து நடந்து சென்றது ராணுவத்தின் பயிற்சியின் தரத்தை வெளிப்படுத்தியது.இந்த விலங்குகள் அணிவகுப்பு ராணுவத்தின் மற்ற அணிகளுக்கு இடையே சிறப்பிடம் பெற்றது.
இதையும் படிங்க: டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலம்.... சாரட் வண்டியில் சென்று தேசிய கொடியை ஏற்றி வைத்த ஜனாதிபதி..!