கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி அன்று 31 வயது பயிற்சி மருத்துவரான பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, மருத்துவமனையின் கருத்தரங்க அறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இவ்வழக்கின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று, கொல்கத்தாவில் பல்வேறு போராட்டங்களும் நினைவு நிகழ்வுகளும் நடைபெற்றன.

இச்சம்பவத்தில் குற்றவாளியாகக் கருதப்பட்ட சஞ்ஜய் ராய், கைது செய்யப்பட்டு, கடந்த ஜனவரி 20ம் தேதி அன்று அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் மற்றும் போராட்டக்காரர்கள் இவ்வழக்கில் முழுமையான நீதி கிடைக்கவில்லை எனவும், பலர் இதில் தொடர்புடையிருக்கலாம் எனவும் குற்றஞ்சாட்டினர். மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) இவ்வழக்கை விசாரித்து, இது கூட்டு பாலியல் வன்கொடுமையல்ல என்றும், ஆனால் ஆதார அழிப்பு மற்றும் சதி தொடர்பாக விசாரணை தொடர்வதாகவும் தெரிவித்தது.
இதையும் படிங்க: அனுமதியின்றி மாடு மேய்க்கும் போராட்டம்...சீமான் கைது? போலீசார் குவிப்பு
இந்நிலையில் முதலாம் ஆண்டு நினைவு நாளில், மேற்கு வங்க இளநிலை மருத்துவர்கள் முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் “நபன்னா அபியான்” என்ற பேரணியை அமைதி நடத்தினர். இதில் மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஆனால், இந்த அமைதியான பேரணியை கலைக்க மேற்கு வங்க காவல்துறை தடியடி நடத்தியது, இது பரவலான கண்டனங்களைப் பெற்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் மீது காவல்துறை தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது, இதில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாதிக்கப்பட்டவரின் பெற்றோர், நீதிக்காக பிரதமர் மோடியைச் சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினர். இச்சம்பவம் பெண்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா முழுவதும் தொடர்ந்து விவாதங்களை எழுப்பியுள்ளது. மருத்துவமனைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய உச்சநீதிமன்றம் ஒன்பது பேர் கொண்ட தேசியப் பணிக்குழுவை அமைத்தது. இவ்வழக்கு, இந்தியாவில் பாலியல் வன்முறை மற்றும் நிறுவன குறைபாடுகளுக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக உள்ளது.

பாஜக தலைவர்கள் மற்றும் மருத்துவர்கள் இந்தக் காவல்துறை நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தனர், குற்றவாளிகள் மீது இதே உறுதியுடன் நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய குற்றங்கள் குறைந்திருக்கும் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கவினின் உடலை பெற்றுக் கொள்ளும் பெற்றோர்... நெல்லை மருத்துவமனையில் போலீசார் குவிப்பு