கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரை அடுத்த கோகர்ணா பகுதியில் உள்ளது ராமதீர்த்த மலை. இந்த மலைப்பகுதியையொட்டி கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த வனப்பகுதியில் வெளிநாட்டினர் நடமாடுவதாக கோகர்ணா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அங்கு சென்ற கோகர்ணா போலீசார் சோதனை செய்ததில், அங்குள்ள குகைக்குள் மனிதர்கள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண், 2 சிறுமிகளுடன் இருந்துள்ளார். பின்னர் அவர்களை வெளியே அழைத்து வந்து விசாரித்ததில் அந்த பெண் ரஷியாவை சேர்ந்த நீனா குடினா (40) மற்றும் அவரது மகள்கள் பிரக்யா (6), அமா (4) என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: அடிக்க பாய்ந்த முதல்வர்.. அதிகாரி எடுத்த ஆக்ஷன்.. சிக்கிய சித்தராமையாவை பொளந்துகட்டும் பாஜக..!
தொடர் விசாரணையில், டூரிஸ்ட் விசாவில் இந்தியா வந்த நீனா, குடும்பத்துடன் கோவாவில் தங்கியிருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கோகர்ணாவில் உள்ள ஆன்மீக தலங்கள் மீது அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டதால், அவர் தனது மகள்களுடன் ஒரு வாரமாக குகையில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது விசாவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் விசா காலாவதியாகி இருப்பதும், இதனால் அவர் சட்டவிரோதமாக குகையில் தங்கியிருந்து, ஆன்மீக தலங்களுக்கு சுற்றுலா சென்று வந்ததும் தெரியவந்தது. அத்துடன் தியானம், யோகா செய்ய குகையில் அவர் தங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து மீட்டு, குமட்டா தாலுகா பங்கிகோட்லு கிராமத்தில் உள்ள ஒரு மடத்தில் தங்க வைத்துள்ளனர். விசா காலம் முடிந்து சட்டவிரோதமாக தங்கிய ரஷிய பெண்ணையும், அவரது 2 மகளையும் சொந்த நாட்டிற்கே அனுப்பி வைக்க போலீசார் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக உத்தரகன்னடாவில் உள்ள தூதரக அலுவலக அதிகாரிகளை போலீசார் தொடர்பு கொண்டு பேசிய நிலையில், அவர்கள் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கும்படி கூறியதாக தெரிகிறது.

அதன்படி ரஷிய பெண் மற்றும் அவரது குழந்தைகளை நாளை (திங்கட்கிழமை) பெங்களூருவில் உள்ள தூதரக அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் பெங்களூருவில் இருந்து அவர்கள் ரஷியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கேரளா, கர்நாடகாவை புரட்டிப்போட்ட கனமழை.. ஆட்டம் காட்டும் தென்மேற்கு பருவமழை..