ஜெனைதா, ஜனவரி 6: வங்கதேசத்தின் ஜெனைதா மாவட்டத்தில் உள்ள காளிகஞ்ச் பகுதியில், 40 வயதுடைய இந்து விதவை ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரு நபர்கள் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததுடன், மரத்தில் கட்டி வைத்து அவரது தலைமுடியை வெட்டி சித்ரவதை செய்துள்ளனர்.
இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் போலீசில் அளித்த புகாரின்படி, சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஷாஹின் என்பவரிடமிருந்து இரு மாடி வீடு மற்றும் சிறிய நிலம் வாங்கினார். அதன்பிறகு ஷாஹின் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றார். பெண் மறுப்பு தெரிவித்ததால், அவர் தொடர்ந்து துன்புறுத்தி வந்தார்.
கடந்த வாரம், ஷாஹினும் அவரது கூட்டாளி ஹசனும் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும், பணம் கேட்டு மிரட்டினர். பெண் பணம் கொடுக்க மறுத்ததால், அவரை மரத்தில் கட்டி வைத்து தலைமுடியை வெட்டினர். இத்தாக்குதலை மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். கடும் சித்ரவதையால் பெண் மயக்கமடைந்தார்.
இதையும் படிங்க: சும்மா வெளுக்கபோகுது... காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றதாக அறிவிப்பு...!

அக்கம்பக்கத்தினர் பெண்ணை மீட்டு ஜெனைதா சதர் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டது. பெண் காளிகஞ்ச் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இச்சம்பவம் அந்நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்த கவலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்... முடிவு ஒத்திவைக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் அறிவிப்பு...