டெல்லியில் நடந்த சிந்தி சமூக சந்திப்பில் பேசிய இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், சிந்து பகுதி இன்று இந்தியாவின் பகுதியாக இல்லாவிட்டாலும், கலாச்சார ரீதியாக இந்தியாவின் அங்கமாகவே இருக்கும் என்று தெரிவித்தார்.
முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானியின் புத்தகத்தில் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி, “சிந்து பகுதி மக்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களும் சிந்து நதியை புனித நதியாகக் கருதுகின்றனர். சிந்து மாகாணத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் கூட மெக்காவின் ஆபே-ஜம்ஜம் நீரை விட சிந்து நதி குறைந்து புனிதம் இல்லை என்று நம்புகின்றனர்” என்று அவர் கூறினார்.
மேலும் பேசிய ராஜ்நாத் சிங், “இன்று சிந்து பகுதி இந்தியாவின் அங்கமாக இல்லாவிட்டாலும், கலாச்சார ரீதியாக சிந்து என்றும் இந்தியாவின் பகுதியாகவே இருக்கும். எல்லைகள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். யாருக்கு தெரியும், நாளைக்கே சிந்து மாகாணம் மீண்டும் இந்தியாவுடன் இணைந்துக்கொள்ளலாம். சிந்துவில் வசிக்கும் மக்கள் எப்போதும் நம் மக்கள்தான். அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் நம் மக்கள்தான்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இரண்டு பக்கமும் போர்!! நெருக்கடியில் பாக்., எங்களை சிக்க வைக்க பார்க்கிறது இந்தியா! புலம்பும் கவாஜா!
இந்தியாவின் பிரிவினைக்குப் பிறகு சிந்து பாகிஸ்தானின் பகுதியாக ஆனாலும், இந்தியாவின் இந்து கலாச்சாரத்தில் சிந்து நதி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ராஜ்நாத் சிங்கின் இந்தப் பேச்சு, சிந்து பகுதியின் கலாச்சார இணைப்பை வலியுறுத்தியது. ஆனால், இது பாகிஸ்தானை பதற்றமடையச் செய்தது. ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் அறிக்கையின்படி, “பாகிஸ்தானின் சிந்து மாகாணம் குறித்த இந்திய ராணுவ அமைச்சரின் ஆபத்தான கருத்தை தீவிரமாகக் கண்டிக்கிறோம். இது போன்ற பேச்சுகள், யதார்த்த நிலையை சீர்குலைக்க முயற்சிக்கும் இந்துத்துவா விரிவாக்க மனநிலையை காட்டுகின்றன.
இது பாகிஸ்தானின் இறையாண்மையை மீறுவதோடு, சர்வதேச சட்டங்களையும் அப்பட்டமாக மீறுகின்றன. பிராந்திய அமைதியை அச்சுறுத்தும் சொல்லாட்சியை ராஜ்நாத் சிங் போன்ற இந்திய தலைவர்கள் தவிர்க்க வேண்டும். முதலில் இந்தியாவில் வசிக்கும் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய அரசு கவனம் செலுத்துவது ஆக்கப்பூர்வமாக இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங்கின் பேச்சு, சிந்து பகுதியின் கலாச்சார இணைப்பை வலியுறுத்தியது என்று இந்திய வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் பாகிஸ்தான் இதை “விரிவாக்கவாதி” என்று கண்டித்துள்ளது. இந்தக் கருத்து, இரு நாடுகளிடையேயான உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
சிந்து பகுதி, 1947 பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானின் முக்கிய மாகாணமாக உள்ளது. இந்தியாவின் இந்து கலாச்சாரத்தில் சிந்து நதி புனிதமானது என்று ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டியது, பாகிஸ்தானின் இறையாண்மையை சவால் செய்வதாக அந்நாடு கருதுகிறது.
இதையும் படிங்க: மொத்தமாக சரண்டர் ஆகுறோம்! மாவோயிஸ்டுகள் அறிவிப்பு! 3 மாநில முதலமைச்சர்களுக்கு பறந்த கடிதம்!!