தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகளுக்கான பட்டியலை இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் கடைசியாக நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். இதற்காக இன்று தவெக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கட்சியின் தலைமை கழகம் சார்பில் நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாகவும் 2026 தேர்தல் வரக்கூடிய சூழ்நிலையில் இந்த கூட்டத்தில் அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட இருப்பதாகவும் மாநில வாரியாகவும், மாவட்ட ரீதியாகவும் மண்டல நிர்வாகிகள் நியமிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் இந்த கூட்டத்தில் நிச்சயமாக அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கட்சி தலைமையானது அவசரமாக மாவட்ட செயலாளர்களுக்கும் மாநில நிர்வாகிகளுக்கும் அறிவுரை விடுத்திருக்கிறது.

இதனிடையே, நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மிக முக்கிய சந்திப்பு ஒன்றிற்காகவும் விஜய் இன்று பனையூர் அலுவலகம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இன்று மதியம் 12 மணி அளவில் கட்சி அலுவலகம் வரும் விஜய், 1 மணிக்கு மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் பட்டியலை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, அதனைத் தொடர்ந்து புதிதாக பலரும் கட்சியில் விஜய் முன்னிலையில் இணைய உள்ளனர்.

இதையும் படிங்க: மாணவிகள் மீது கை வைத்து தொட்டு பேசுவதா? - விஜய்க்கு எதிராக ஆவேச போஸ்டர்கள்..!
ஏற்கனவே விருப்ப ஓய்வு பெற்றிருக்கக்கூடிய மத்திய அரசின் பணியில் இருந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்குமார், விஜயுடன் பல நிகழ்வுகளில் பயணித்திருக்கிறார். குறிப்பாக மாஸ்டர் பட திரைப்படத்தின் போது விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த தருணத்தில் விஜய்க்கு உதவியதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. மேலும் அவர் விருப்ப ஓய்வு பெற்றதே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காகத் தான் என்றும் செய்திகள் வெளியாகி வந்தன.

இன்று பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் விஜயைச் சந்திக்க உள்ள அருண்குமார், அவர் முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. வர உள்ள தேர்தலில் ஆற்ற வேண்டிய களப்பணிகள் தொடர்பாகவும் விஜய் தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!