நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவான தக் லைப் திரைப்படம் ஜூன் 5ல் வெளியானது. இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் பங்கேற்றார். நிகழ்ச்சியில் கமல் பேசுகையில், 'தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்' என்றார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உள்ளது. அது பற்றி கமலுக்கு தெரியவில்லை; பாவம், வரலாறு தெரியாமல் பேசுகிறார் என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா சொன்னார்.

பா.ஜ.,வைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறுகையில், ''நடிகர் கமல் மனநலம் சரியில்லாதவர்; அவர் ஒரு பைத்தியம். கன்னட சினிமா துறை அவருக்கு நிறைய கொடுத்து உள்ளது. இதை எல்லாம் மனதில் வைத்திருந்தால், கன்னட மொழி பற்றி அவர் பேசி இருக்க மாட்டார். கொஞ்சமாவது நியாயமாக பேச வேண்டும். கமலை போன்ற நகர்ப்புற நக்சல்கள் இப்படி தான் பேசுவர்,'' என்றார்.
இதையும் படிங்க: கமல்ஹாசனுக்கு கிடைத்த உயரிய கௌரவம்.. வாழ்த்து சொன்ன முதல்வர்.. ஆண்டவரின் ரியாக்ஷன்..!
இதனிடையே கமல்ஹாசன் கருத்தை, தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். 'தமிழில் இருந்து தான் கன்னட மொழி பிறந்தது. இது தான் வரலாற்று உண்மை' என, சீமான், அன்புமணி, திருமாவளவன் உள்ளிட்டோர் கமலுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
என் கருத்தை, என் அருகில் இருந்து பார்த்தால் சரியாக தெரியும். உங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தால், அது தவறாக தோன்றும். அன்பு மிகுதியால் நான் அப்படி பேசினேன். இந்த விஷயத்தில் அவர்கள் குழம்பி உள்ளனர். மொழி பற்றி வரலாற்று அறிஞர்கள் எனக்கு கற்று கொடுத்துள்ளனர். மொழிகள் பற்றி பேச, அரசியல்வாதிகளுக்கு தகுதி இல்லை. அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என கமல்ஹாசன் தெரிவித்தார்.

இந்த நிலையில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதித்தது. கர்நாடக ஐகோர்ட்டும் படத்துக்கு தடை விதித்தது. தடையை நீக்கி உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் கமல் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம் படத்துக்கான தடையை ரத்து செய்து உத்தரவிட்டது. இருப்பினும் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை திரையிட மாட்டோம் என கமல் அறிவித்தார். படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் இந்த பிரச்னை முடிந்துவிட்டதாகவே எல்லாரும் நினைத்தனர்.
ஆனால் கன்னட சாகித்ய பரிஷத்(KSP) என்ற அமைப்பு கமல்ஹாசனுக்கு எதிராக பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்து இருந்தது. அதன் மீதான விசாரணை நேற்று நடந்தது. கமலின் கருத்துகள் கன்னட மக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டது. அவருடைய பேச்சு மற்றும் அறிக்கையில் கூறிய கருத்துகள் உண்மைக்கு புறம்பானதாக இருந்தன.

கன்னடமும், தமிழும் சகோதர மொழிகள். கமல் தனது கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என கன்னட சாகித்ய பரிஷத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். கமல் தரப்பில் யாரும் இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜராகவில்லை.
இதையடுத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். கமல்ஹாசன் கன்னட மொழி, இலக்கியம், கலாசாரம் அல்லது கர்நாடக மக்களை புண்படுத்தும் விதமாக, எந்த கருத்தையும் வெளியிடக்கூடாது என, நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30ம்தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி அப்போது கமல்ஹாசன் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அடிக்க பாய்ந்த முதல்வர்.. அதிகாரி எடுத்த ஆக்ஷன்.. சிக்கிய சித்தராமையாவை பொளந்துகட்டும் பாஜக..!