தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாயை அந்தந்த பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தி வந்தது. இந்த நிலையில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், உரிமைத்தொகை 3000 மற்றும் மே மாத வெயில் தாக்கத்தில் பெண்கள் அவதிப்படாமல் இருப்பதற்காக சிறப்பு தொகையாக 2000 மொத்தம் 5000 ரூபாய் ஒவ்வொரு பயனாளிகளின் வங்கி கணக்கில் இன்று காலை செலுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சி தொடர்ந்தால், மாதாந்திர உரிமைத் தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்குவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
தேர்தல் தோல்வி பயத்தால் திமுக அரசு மகளிர் வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்து வருகின்றன. அதேசமயம் வங்கிக் கணக்கில் ரூ.5000 டெபாசிட் செய்யப்பட்டதாக செல்போனில் மெசெஜ் வந்ததைப் பார்த்த பெண்கள் மட்டற்ற மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். மாதந்தோறும் கிடைக்கும் ஆயிரம் ரூபாய் வைத்து குடும்ப செலவுகளை கவனித்து வந்ததாகவும் தற்போது வழங்கப்பட்டுள்ள ஐந்தாயிரம் ரூபாய் என்பது அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக இல்லத்தரசிகளும், தங்களது வியாபாரத்திற்கு இந்த பணத்தை பயன்படுத்துவேன் என சிறு தொழில் செய்யும் மகளிரும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் மகளிர் உரிமை தொகை 5000 ரூபாய் வரவு வைக்கப்பட்டதையும், எதிர்காலத்தில் உரிமை தொகையை 2000 ரூபாயாக உயர்த்துவதாக தமிழக முதல்வர் அறிவித்ததை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். டேன் டீ அலுவலம் முன்பு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நீலகிரி எம்.பி. ஆ. ராசா இனிப்புகள் வழங்கினார். அவரோடு நீலகிரி மாவட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். தூத்துக்குடியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அண்ணா பேருந்து நிலையம் முன்பு வெடி வெடித்து அங்குள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு அழகிரி டீம் அதிர்ச்சி வைத்தியம். எதிர்பாராத ட்விஸ்ட்!! மதுரை அரசியலில் பெரிய திருப்பம்!!
உளுந்தூர்பேட்டையில் சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் தலைமையில் ஒன்றிய சேர்மன் ராஜவேல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று பட்டாசு வெடித்து பெண்களுக்கு இனிப்பு வகை வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். தஞ்சை கலைஞர் சிலை முன்பு எம்.எல்.ஏ. துரை. சந்திரசேகரன், தஞ்சை எம்.பி முரசொலி, தஞ்சை எம்.எல்.ஏ டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்டோருடன் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ம்பகோணத்தில் திமுகவினர் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் தலைமையில் திமுக கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் பட்டாசுகள் வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர். அரூரில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் எடுபடாது.. திமுக தோல்வி உறுதி..! TTV தினகரன் திட்டவட்டம்..!