நியூடெல்லி, ஜனவரி 6: தலைநகர் டெல்லியின் முகுந்த்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மெட்ரோ ரெயிலில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்த அஜய் விமல் (45), அவரது மனைவி நீலம் (38), மகள் ஜான்வி (10) ஆகியோரே உயிரிழந்தவர்கள்.
முகுந்த்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 5வது மாடியில் அஜய் விமல் குடும்பம் வசித்து வந்தது. இன்று அதிகாலை அவர்கள் தங்கியிருந்த அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால், உள்ளே தூங்கிக் கொண்டிருந்த மூவரும் தப்ப முடியாமல் சிக்கிக் கொண்டனர். அக்கம்பக்கத்தினர் கண்டுபிடித்து அலாரம் கொடுத்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனர். ஆனால், அப்போதற்குள் அஜய் விமல், நீலம், ஜான்வி ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். தீயணைப்புப் படையினர் உடல்களை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: நெருங்கும் பொங்கல் விழா... 22 ஆயிரம் கூடுதல் பேருந்துகள்... போக்குவரத்து கழகம் அறிவிப்பு...!

முதற்கட்ட விசாரணையில், வீட்டில் மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். வீட்டில் இருந்த மின்சாதனப் பொருள்களில் ஒன்றில் ஏற்பட்ட கசிவே தீயை ஏற்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அஜய் விமல் டெல்லி மெட்ரோ ரெயிலில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தவர். அவருக்கு 10 வயது மகள் ஜான்வி மட்டுமே இருந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து தொடர்பாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: அமெரிக்க து.அதிபர் ஜே.டி. வான்ஸின் வீடு மீது தாக்குதல்! உடைக்கப்பட்ட ஜன்னல்கள்!! நூழிலையில் தப்பிய வான்ஸ்!