தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழியர்கள் தற்போது தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது மிகுந்த கவனத்தை ஈர்த்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களின் பல்வேறு நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருந்து வருகின்றன. இப்போது அவை மீண்டும் தீவிரமடைந்து, சென்னை தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களில் காத்திருப்பு போராட்டமாக வெடித்திருக்கிறது. முக்கியமான கோரிக்கைகள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதிய வசதி, பாதுகாப்பான பணி சூழல் போன்றவை.
டாஸ்மாக் ஊழியர்கள் பெரும்பாலும் தற்காலிக ஊழியர்களாகவோ அல்லது ஒப்பந்த அடிப்படையிலோ பணியாற்றி வருகின்றனர். ஆண்டுகளாக இதே நிலை தொடர்வதால், பாதுகாப்பின்மை, ஊதிய உயர்வு இல்லாமை, ஓய்வுக்குப் பின் எந்த உதவியும் இல்லாத நிலை ஆகியவை அவர்களை மிகவும் பாதித்திருக்கின்றன. டாஸ்மாக் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் மீண்டும் டாஸ்மாக் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பணி நிரந்தரம் தொடர்பாக அமைச்சருடன் டாஸ்மாக் ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாகவும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு திட்டம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் முத்துச்சாமி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருப்பதாக வெளியான தகவலை டிடிவி தினகரன் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: மது பிரியர்களுக்கு ஷாக்..! நாளை டாஸ்மாக் கடைகளுக்கு லீவ்..! முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஏற்கனவே நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்காத டாஸ்மாக் நிர்வாகம், தற்போது மதுபான காலி பாட்டில்களையும் திரும்பப் பெற வேண்டும் என்ற பணிச்சுமையையும் ஏற்றியிருப்பது டாஸ்மாக் பணியாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார். தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்களின் பிரதிநிதிகளை மீண்டும் அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளான பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் மது விற்பனை சாதனை..!! குடியரசு தின விடுமுறைக்கு முன் ரூ.220 கோடி கடந்து சேல்ஸ்..!!