பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் ஒருவர், சீனாவின் ஷாங்காய் புடோங் விமான நிலையத்தில் 18 மணி நேரம் சித்ரவதை செய்யப்பட்டார். அருணாச்சல் பிரதேசத்தைத் தன் பூர்வீகமாகக் குறிப்பிட்ட பாஸ்போர்ட்டை அடிப்படையாகக் கொண்டு, சீன குடியுரிமை அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை செல்லாததாக அறிவித்து, அருணாச்சல் பிரதேசம் சீனாவின் பகுதி என்று மிரட்டினர்.
இந்தச் சம்பவம், இந்தியாவின் இறையாண்மைக்கு நேரடி அவமானம் என்று பாதிக்கப்பட்ட பெண் கூறுகிறார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதி, சம்பவத்தில் தொடர்புடைய சீன அதிகாரிகள் மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த பேமா வாங்ஜோம் தோங்டோக், அருணாச்சல் பிரதேசத்தைத் தன் பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் கடந்த நவம்பர் 21-ம் தேதி லண்டனில் இருந்து ஜப்பானுக்கு புறப்பட்டுச் சென்றார். அந்த விமானம் சீனாவின் ஷாங்காய் புடோங் விமான நிலையத்தில் மூன்று மணி நேரம் நின்று செல்லும் எனத் தெரிந்திருந்தது. எனவே, பேமா அங்கு இறங்கி, அடுத்த விமானத்தைப் பொறுத்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், அது மூன்று மணி நேர காத்திருப்பாக மட்டுமல்ல, 18 மணி நேர சித்ரவதையாக மாறியது.
இதையும் படிங்க: வேதனையா இருக்கு... தென்காசி பேருந்து விபத்து... மீட்புப் பணிகளை துரிதப்படுத்த முதல்வர் ஆணை...!
பேமாவின் பாஸ்போர்ட்டில் அருணாச்சல் பிரதேசத்தை பூர்வீகமாகக் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்த சீன குடியுரிமை அதிகாரிகள், கடுமையாக நடந்து கொண்டனர். "அருணாச்சல் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி. உங்கள் பாஸ்போர்ட் செல்லாது" என்று அவர்கள் அறிவித்தனர்.
இதைப் பார்த்து, சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்களும் கூட அவர்களுடன் இணைந்து கேலி செய்து சிரித்தனர். மேலும், பேமாவை சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தினர். இந்த மிரட்டல் மற்றும் அவமானத்தால், பேமா திட்டமிட்டபடி ஜப்பானுக்கு செல்ல முடியவில்லை.
விமான நிலையத்தில், பேமாவை சோதனை செய்த சீன அதிகாரிகள், அவரை ஒரு அறையில் சிறைப்படுத்தினர். அடிப்படை வசதிகளான உணவு, குடிநீர் உள்ளிட்டவை எதுவும் வழங்கப்படவில்லை. ஜப்பானுக்கு செல்ல உரிய விசா இருந்தும், அடுத்த விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை.

மாறாக, "சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸில் மட்டுமே புதிய டிக்கெட் வாங்குங்கள். அப்படி செய்தால் மட்டுமே பாஸ்போர்ட்டைத் திருப்பித் தருவோம்" என்று அழுத்தம் திணித்தனர். இதனால், பேமாவின் ஜப்பான் டிக்கெட், ஹோட்டல் புக்கிங் ஆகியவை அனைத்தும் வீணாகின. அவர் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தச் சமயத்தில், பிரிட்டனில் இருந்த பேமாவின் நண்பர் மூலம் சீனாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முடிந்தது. அவர்கள் விரைவாக விமான நிலையத்திற்கு வந்து, பேமாவை மீட்டெடுத்து, பாதுகாப்பாக விமானத்தில் அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம், சீனாவின் அருணாச்சல் பிரதேசத்தின் மீதான தொடர் துரோக உணர்வை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், பேமா தனக்கு நேர்ந்த சம்பவத்தை விரிவாக விவரித்துள்ளார். "இது இந்திய இறையாண்மைக்கு நேரடி அவமானம். அருணாச்சல் பிரதேச மக்களை அவமதிக்கும் செயல்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சம்பவத்தில் தொடர்புடைய சீன குடியுரிமை அதிகாரிகள், விமான நிறுவன ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறும், இனி இத்தகைய சம்பவங்கள் இந்தியர்களுக்கு நேரிடாமல் தடுக்குமாறும் அவர் கோரியுள்ளார். இந்திய அரசு இக்கடிதத்தைப் பெற்றுக்கொண்டு, சீனாவுடன் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சம்பவம், சீனாவின் இந்திய எல்லைப் பிரச்சினை தொடர்பான அணுகுமுறையை மீண்டும் உலக கவனத்திற்கு கொண்டுவருகிறது. அருணாச்சல் பிரதேசத்தை "சவுங்லோங்" என்று அழைத்து சீனா தொடர்ந்து உரிமை கோரி வருவதன் ஒரு பகுதியாக இது கருதப்படுகிறது.
இதையும் படிங்க: தேர்தல் சலுகைகள் தாராளம்! கொட்டிக் கொடுக்க திட்டம்!! கோட்டையில் நடக்கும் தொடர் ஆலோசனை!