அமெரிக்காவின் புதிய வெளியுறவுத் துறை மந்திரியாகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இந்தியா வந்துள்ள மார்கோ ரூபியோ, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது. சந்திப்பின்போது இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் இரு நாடுகளின் உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. இந்த சந்திப்பு மிகவும் ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார். “இந்தியா, அமெரிக்காவின் மிக முக்கியமான கூட்டாளியாக விளங்குகிறது. இரு நாடுகளும் தடையற்ற, வெளிப்படையான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கும் நோக்கில் தொடர்ந்து முன்னேறி வருகின்றன” என அவர் குறிப்பிட்டார்.

ரூபியோவின் இந்தியப் பயணம் கொல்கத்தாவில் இருந்து தொடங்கியது. அங்கு அன்னை தெரசா நிறுவிய கருணை பணியாளர் அமைப்பின் (Missionaries of Charity) தலைமையகத்திற்குச் சென்று பார்வையிட்ட அவர், மனிதநேயப் பணிகளுக்கு தனது பாராட்டைத் தெரிவித்தார். பின்னர் கொல்கத்தாவின் சின்னமாக விளங்கும் விக்டோரியா நினைவகத்திற்குச் சென்று வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை ரசித்தார்.
இதையும் படிங்க: தலைவரா போன அதே இடத்திற்கு இப்போ CM-ஆக..!! பக்கா பிளானுடன் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்..!!
இந்த 4 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, ரூபியோ ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்கும் செல்லத் திட்டமிட்டுள்ளார். வருகிற 26-ம் தேதி டெல்லியில் நடைபெறும் குவாட் (Quad) கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் சந்திப்பிலும் அவர் பங்கேற்கவுள்ளார். அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடங்கிய இந்த குவாட் அமைப்பு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சமாதானம், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
இந்தியா-அமெரிக்க உறவுகள் சமீபகாலமாக பல தளங்களில் வலுப்பெற்றுள்ள நிலையில், ரூபியோவின் இந்தப் பயணம் புதிய ஆற்றலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்கள், தொழில்நுட்பப் பகிர்வு உள்ளிட்டவை இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: மக்களே.. ஷாப்பிங்கிற்கு தயாரா..?? BAG தூக்க நாங்க ரெடி..!! டெல்லியில் புதுமையான ‘கேரிமென்’ சேவை தொடக்கம்..!!