இந்தி மொழி நாளையொட்டி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சர், இந்திய நாட்டின் மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகளுக்கு இடையே ஒரு பாலமாக இந்தி செயல்படுகிறது. இந்தி மொழி வெறும் தகவல் தொடர்பு ஊடகமாக மட்டுமல்லாமல், தொழில்நுட்பம், அறிவியல், நீதி, கல்வி மற்றும் நிர்வாகத்தின் அச்சாணியாக மாறுவதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள் என்றும் நாட்டின் குடிமக்களை ஒன்றிணைப்பதில் இந்தி, முக்கியப் பங்கு வகித்துள்ளது. அனைத்து மொழிகளையும் இணைத்து, வளர்ந்த, மொழியியல் ரீதியாகத் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதில் இந்தி தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு தேசத்தில், 22 அலுவல் மொழிகளைக் கொண்டிருக்கும் அரசின் நிர்வாகத்தில் ஒற்றை மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது எதேச்சதிகாரப் போக்கு என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக இந்தியை மாற்றுவதே லட்சியம் என்று கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் பாஜக, பன்முகத்தன்மை கொண்ட நாட்டை ஒற்றைத் தன்மையில் சுருக்க முயல்வதாக விஜய் குற்றம் சாட்டினார்.

இப்போது ஒரே நாடு ஒரே மொழி என்று இந்தியைத் திணிக்க முயல்வதாகவும் ஒரு மொழியை வலுக்கட்டாயமாகத் திணிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தமிழகத்தில் இருமொழிக் கொள்கை என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கையும்கூட என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: சாரை சாரையாக குவியும் தொண்டர்கள்...விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்... தவெக எடுத்த முக்கிய முடிவு!
கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக இந்தியை மாற்றுவதே லட்சியம் என்ற தன் கருத்தை உள்துறை அமைச்சர் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் ஒப்புதலோடு இந்த கருத்துக்களை வெளியிடுவதாக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருள்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வக்பு விவகாரம்... தவெகவின் சட்ட போராட்டத்திற்கான வெற்றி... மார்த்தட்டிய விஜய்!