ஈரோட்டில் அறுந்து கிடந்த மின் வயரை விதித்து ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குப்பிச்சிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த சோகச் சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் 11 வயது மாணவன் யோகேஷ், உணவு இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அறுந்து கிடந்த மின்சார ஒயரை தெரியாமல் மிதித்ததால் அவருக்கு மின்சாரம் தாக்கியது.

உடனடியாக மயக்கமடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.மாணவனின் உடல் மைலம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சோகச் செய்தி பரவியதும் அவரது உறவினர்கள், சக மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு! நயினார் நாகேந்திரன் மீதான குற்றச்சாட்டு பதிவுக்கு உயர் நீதிமன்றம் தடை!
பள்ளி வளாகத்திலேயே ஆபத்தான மின்சார ஒயர் அறுந்து கிடந்ததை சுட்டிக்காட்டி, பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் வந்து உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து, போராட்டக்காரர்களை அமைதிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி வளாகத்தில் இத்தகைய ஆபத்து ஏற்பட்டது குறித்து பெற்றோர்களும் பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: “லஞ்சம் கேட்டால் உடனே புகார்”..! சென்னை போலீஸ் வெளியிட்ட பிரத்யேக WhatsApp எண்.!