சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். கட்சியின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் தற்போது நிலவி வரும் உள்கட்சி அதிருப்திக்கு மத்தியில் இந்தக் கூட்டம் நடைபெறுவது அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட சில அதிருப்தி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. முக்கிய நிர்வாகிகள் சிலர் கூட்டத்தை புறக்கணித்திருப்பது கட்சிக்குள் பேசுபொருளாகியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் கட்சியின் செயல்பாடு, வாக்குகளை திரட்டுவதில் ஏற்பட்ட சிக்கல்கள், தொகுதி அளவிலான களப்பணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடியின் அடுத்த அதிரடி..!! ஒன்றுசேரும் அதிமுகவினர்.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா கழகம்..??
இதற்கிடையே, அதிமுகவைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் தவெகவில் இணைந்துள்ள நிலையில், கட்சியின் கட்டமைப்பை மீண்டும் வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மாவட்டம் முதல் கிளை அளவு வரை கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவது, தொண்டர்களை தொடர்ந்து களத்தில் செயல்பட வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், இளைஞர்களை அதிகளவில் கட்சிக்குள் கொண்டு வருவது எப்படி என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. சமூக வலைதளங்களில் கட்சியின் செயல்பாட்டை அதிகரிப்பது மற்றும் புதிய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் கருத்துகள் பரிமாறப்படுவதாக கூறப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய அரசியல் வியூகங்கள் குறித்தும் மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்கி, அடிமட்ட அளவில் கட்சியை தீவிரமாக தயார்படுத்துவது குறித்து கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிருப்தி நிர்வாகிகள் பங்கேற்காத நிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், அதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் பயணத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு கட்சி வட்டாரத்தில் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: தினகரன் vs பழனிசாமி! பகை முடிந்ததாக சொன்ன நிலையில் மீண்டும் ‘ஆபரேஷன்’ ஆரம்பம்?