திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம், இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என்ற ஒரே நம்பிக்கைதான், தமிழக மக்களுக்கு தற்போது நிம்மதி அளிக்கும் ஒரே விஷயம் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் நிலையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம் செய்துள்ளார். சென்னை அரசு கலைக்கல்லூரி கேண்டீனில் பணியாற்றும் 22 வயது இளம்பெண் மூன்று பேரால் பாலியல் வன்முறைக்கு உள்ளான செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை குறிப்பிட்டு அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பது கடினமான உண்மை. கல்வி நிலையங்களில் கூட பாதுகாப்பு இல்லாத நிலை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: குடியரசு தினவிழாவில் இப்படியா? காவலர்களின் கவுரவம் நடுத்தெருவில் நிற்கிறது! இரவல் பதக்கம் சர்ச்சை!
முதல்வர் ஸ்டாலின் மேடையில் “தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம்” என்று பேசினாலும், தினசரி வரும் செய்திகள் அதற்கு மாற்றமான உண்மையை காட்டுவதாக அண்ணாமலை சாடியுள்ளார். “முதல்வர் மாய உலகத்தில் வாழ்வதை நிறுத்தி, உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் சரியான நடவடிக்கைகளை எடுக்க முடியும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதுவே பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை போன்ற குற்றங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். “திமுக ஆட்சியின் கையாலாகாத்தனம் அமைதியான தமிழகத்தை சிதைத்துவிட்டது. குற்றவாளிகளை காப்பாற்ற திமுக அமைச்சர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ளும் இழிநிலை நிலவுகிறது. இதனால் குற்றவாளிகளுக்கு பயம் இல்லை, சாதாரண மக்களுக்குத்தான் பயம்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் மேலும் பல சம்பவங்கள் நடக்கும் என்று எச்சரித்த அண்ணாமலை, “திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம். இன்னும் சில நாட்களில் இது முடிந்துவிடும் என்ற ஒரே நம்பிக்கைதான் தற்போது தமிழக மக்களுக்கு நிம்மதி அளிக்கும் ஒரே விஷயம்” என்று கூறியுள்ளார்.
இந்த அறிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பெண்கள் பாதுகாப்பு, குற்றக் கட்டுப்பாடு போன்ற விவகாரங்கள் முக்கிய பிரச்சார பொருளாக மாறியுள்ளன. திமுக அரசு இதற்கு என்ன பதில் அளிக்கும் என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அண்ணாமலையின் இந்த கடும் விமர்சனம் தேர்தல் களத்தில் புதிய சூழலை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: திமுகவா? தவெகவா? தமிழக காங்.,சில் கோஷ்டி மோதல்! விளாசும் நயினார் நாகேந்திரன்!