திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்பியுமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளதாக சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இன்றைக்கு குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.
திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்பியுமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்துள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியது. 1999 ஆண்டு பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தது முதல் 2010ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆ. ராசா மீது புகார் எழுந்தது. அமைச்சர் பதவியை பயன்படுத்தி இவர் கூடுதல் சொத்துக்களை சேர்த்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த அடிப்படையில் ஆ. ராசா வீடு மற்றும் அலுவலகங்களில் 2015ம் ஆண்டு சிபிஐ ரெய்டு நடத்தியது. டெல்லி, சென்னை, திருச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் 2015ல் ரெய்டு நடத்தப்பட்டது.
தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. ஏழு ஆண்டுகள் விசாரணைக்குப்பின் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி என நான்கு நபர்கள் மற்றும் இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக கடந்த 2023-ம் ஆண்டு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதன்படி, குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக,அதாவது 5 கோடியே 53 லட்ச ரூபாய் அளவுக்கு ஆ ராசா சொத்துகளை குவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: உங்களுடன் ஸ்டாலின் இல்ல! ஊழலுடன் ஸ்டாலின் தான்... லெப்ட் ரைட் வாங்கிய அன்புமணி
இந்த நிலையில், இந்த வழக்கில் கடந்த ஆண்டு, குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா தாக்கல் செய்த மனுவில், தனது வருமான வரி கணக்கு தாக்கல் விவரம் வழக்கின் சில ஆவணங்கள் வழங்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ. "ஆ.ராசாவின் வருமான வரி கணக்கு தொடர்பான விவரங்கள் அவரிடமே இருக்கிறது என்றும் சாட்சி விசாரணையின்போது அதனை அவர் சரிபார்க்கலாம்" என வாதிட்டது.
அனைத்து தரப்பு வாதங்களுக்குப் பிறகு, இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்த விவரங்களை கோரிய ஆ.ராசாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவுள்ளதோடு, ஆ.ராசா உள்ளிட்ட வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட அனைவரும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் வருகை! பாதுகாப்பு வளையத்தில் தூத்துக்குடி மாநகரம்!